Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Friday, March 20, 2009

வடக்கு கிழக்கின் “சிங்களமயத் திட்டங்கள்” யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு)

“நாட்டைக் காப்பது அல்லது நாட்டின் இறைமையைக் காப்பது” என்ற சுலோகங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் தற்போதைய யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல மீண்டும் ஒரு 1956 ஆண்டின் சிங்களமயமே அதன் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத விடயம்.

கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டோம் என்றும் அந்த மாகாணசபைக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தின் முன்னால் கூறிவருகிறது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படாது. அதன்போது பாரிய தடங்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கோடிட்டு காட்டுவதாகவே கிழக்கு மாகாண சபைக்கு சிங்களவர் ஒருவரைக் காணி அமைச்சராக நியமித்தமையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான நிர்வாகம் இதன் பாரதூரத்தை எந்தளவு உணர்ந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது.

இதற்கு அடுத்தப்படியாக தென்னிலங்கையின் கிழக்கு மாகாண மீட்பின்போது பாரிய பிம்பமாகக் காட்டப்பட்ட சிங்களத்தில் “தொப்பிக்கல” எனப்படும் குடும்பிமலைப் பகுதியில் அனைத்துமத கலாசார மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டபத்தின் அமைப்பானது அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து வரும் சிங்கள இனவாதத்தைத் தமது அரசியல் இருப்புக்காகப் பயன்படுத்தி வரும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கை என்பது யாருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஏனெனில் எப்போதும் “வடக்குகிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயகம்”என்ற கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத அமைப்பாகவே இந்த ஜாதிக ஹெல உறுமய இருந்து வந்துள்ளது. இதற்கு உதாரணங்கள் பலவற்றையும் அது கூறிவந்துள்ளது. கிழக்கில் பல பௌத்த புராதனச் சான்றுகள் உள்ளதாகவும் வடக்கிலும் பௌத்த சின்னங்கள் உள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்து வந்திருக்கிறது. எனவே இதன் ஒரு கட்டமே குடும்பிமலையில் கலாசார மண்டபத்தை அமைக்கும் திட்டம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இதனைத் தவிர திருகோணமலையில் முன்னர் போலவே சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருகோணமலையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் பெரும்பான்மையினமாக இருந்த தமிழர்களுக்குச் சமமாக சிங்களவர்களின் சனத்தொகையும் இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தக் குடியேற்றத் திட்டங்கள் சிங்களத் தலைமைகளினால் நடத்தப்பட்டு வந்தன. இதன்மூலமே தமிழர் தாயகக் கொள்கையை உடைக்க முடியும் என்ற அடிப்படையில் அன்று முதலே சிங்களத் தலைமைகள் இந்தத் திட்டத்தை ஆரோக்கியமாகவே செயற்படுத்தி வந்துள்ளன. அதற்கு நல்ல பயனும் அந்த தலைமைகளுக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவும் அண்மைய செவ்வி ஒன்றில் இதனை உணர்ந்தவராக “தற்போது இடம்பெற்று வரும் குடியேற்றத் திட்டங்களைத் தடுக்கவேண்டும்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார். எனினும் அவரின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு அவருக்கு எந்தளவு இதனைத் தடுப்பதற்கு உதவும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கிழக்கில் தமது புதிய குடியேற்ற நடவடிக்கைகளைச் “சிங்கள மயமாக்கலின்” விதைகளைக் காத்திரமாக விதைத்துள்ள இலங்கை அரசாங்கம் வடக்கிலும் இந்தத் திட்டங்களைக் காத்திரமாக முன்னெடுக்க முனைந்து வருகிறது. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை இரண்டாகப் பிரிக்கச் செய்ததன் மூலம் தமது நோக்கத்தை செவ்வனே மேற்கொண்டு வருவதைப்போன்று வடக்கிலும் தமது நோக்கத்தை அடைவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனம் அடையச் செய்வதே அரசாங்கத்தின் உள்ளார்ந்த நோக்கமாகும்.

இதற்காகவே நாடு அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் கூட அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டி வருகிறது. மன்னார் மடுப் பிரதேசத்தில் இருந்து சர்வதேசக் கருத்தின் அடிப்படையில் சர்வதேச யுத்த நிலைப்பாட்டுக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகள் விலகிச் சென்றனர். எனினும் அதனை அவர்களின் பலவீனமாகத் தென்னிலங்கைக்குச் சுட்டிக் காட்டிய அரசாங்கம் தற்போது அங்கு சிங்கள மயத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு கட்டமே மடு மாதா ஆவணித்திருவிழா நடைபெறாத சூழ்நிலையில் தென்னிலங்கையில் இருந்து மாத்திரம் நாள் ஒன்றுக்கு 200 அடியார்களை மடுமாதா தரிசனத்திற்கு அனுமதித்த செயலை நாம் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அரசாங்கம் தமது அரசியலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக செய்து முடித்திருக்கிறது என்பதுடன் சிங்களவர்களுக்கும் வடக்குக்குச் சென்று வர வழிவகுத்து விட்ட திருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

மன்னாரில் உள்ள மடுமாதாவை தரிசிக்க மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு வாய்ப்பை வழங்காத அரசாங்கம் சிங்களவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தமையானது சிங்களமயத்தின் 2008 ஆம் ஆண்டு நகர்வு என கூறலாம். தென்னிலங்கையில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 அடியார்களை மடுமாதா ஆலயத்திற்கு அனுமதிக்கின்ற போது தமிழர்களை ஏன் அனுமதிக்கவில்லை எனக் கேட்ட போது மன்னார் ஆயருக்கும் படைத்தலைமைக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் சர்வதேச மற்றும் மத சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னிலங்கை அடியார்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்த இலங்கை அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டுள்ளது.

இந்தநிலையில் அரசாங்கத்தின் சிங்களமயத் திட்டங்கள் கிழக்கைப் போன்று வடக்கிலும் சாத்தியப்படுமா? என்பதை யுத்தகள நிலவரங்களே தீர்மானிக்கப் போகின்றன என்பதே யதார்த்தம்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.