Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, April 7, 2009

கருகி கிடக்கின்றோம் கண்ணில்லையோ உமக்கு!

கண்ணீர் சிந்தும் விழியோடு கனவு தேசத்தில் கருகிப்போகும் எம் உறவுகளை கண்ணுற்று கதறி, எழுந்து நடந்து பங்கருக்குள் வாழ்ந்து நடைபிணமாய் வாழும் உந்தன் தேசத்து உறவு ஒன்றின் கண்ணீர் கடிதமிது

எத்தனையோ கடிதம், எத்தனையோ மடல் உனக்கு மட்டுமல்ல உலகத்துக்கே எழுதிய களைப்பு மிகுதியால் கைகள் வலிக்கிறது. கை கூப்பி நாம் வணங்கும் தெய்வங்களை கேட்டோம், கருணை காட்டு என்று காலில் விழாக்குறைாய் விரியும் உலகங்கள் தோறும் கேட்டோம். காதில் வாங்கியோர் யாருமில்லை. கைவிரித்து கைகளிலிருக்கும் எங்கள் காவல் தெய்வங்களிள் ஆயுதங்களை கீழே வை என்கிறது இந்த பாழ் பட்ட உலகு!

அன்பார்ந்த அனைத்துலக சொந்தங்களே! வாழ்வு இறுதியாகிவிட்டாதாய் மனது சொன்னாலும் தலைவன் மீது நாம் கொண்ட அளவு கடந்த நம்பிக்கை சற்றும் சளைக்கவில்லை. என்றோ ஒரு நாள் நல்ல செய்தி ஒன்றை காவி எங்கள் ஊடகங்கள் எம்மை அடையும் என்ற நம்பிக்கை கதவுகள் இன்றும் அடைபடவில்லை.

நேற்றும் பல நூறு பேர் செத்து பிணமாய் வீழ்ந்த துயரத்தை கண்ணுற்றபடியே தான் இக்கடித்தை வரைகின்றேன். எரிகுண்டுகளால் எரிந்த பிணக்குவியல்களை கண்ணுற்ற அந்த கண்ணிலிருந்து இப்போது கண்ணீர் வருவதில்லை. கண்ணீர் வற்றியாதாலோ என்னவோ எம் கன்னங்கள் காய்ந்து விட்டன.

கன்னத்தில் வடிந்த உப்பு நீரால் வெளுக்கிடந்த கன்னங்கள் இப்போது வெளுறுவதில்லை. வாழ்வா சாவா என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் நிறைந்து கிடக்கிறது.

நாளை விழப்போகும் குண்டுக்கு நானும் இரையாகலாம். இல்லை காலிழந்து கையிழந்து உறவுக்கு பாரமாகலாம்.

இரண்டு கால்களையும் இழந்தவரின் இயலாமையைக் கண்டு நான் செத்திடலாம் என்றே எண்ணுகின்றேன். மரணம் என்னை சுற்றியிருப்போருக்கு வலியைக் கொடுக்கும், எனக்கு மட்டுமே சுகத்தை தரும். அதனால் நான் சாவினை அழைக்கின்றேன். ஆனாலும், ஏறிகின்ற எறிகணைக்கு காதுமில்லை கண்ணுமில்லை, தன் வலுவை இழக்கும் வரை சென்று வெடிக்கும். ஆனாலும் எங்கள் மரணங்கள் நாளை சரித்திரத்தை மாற்றும் என்று நம்பிகின்றேன். நான்கு லட்சத்துக்கு மேற்ப்பட்ட எமது மக்களின் மரணத்தில் விடியாத எம் தேசமும், எம்மை பார்த்து இரங்காத உலகும் எம் சாவில் கண்விழித்தால் கண்டிப்பாக எங்கள் ஆத்மா சாந்தி பெறும்.

இன்று வரை இந்தியாவில் வாலை பிடிக்கும் ஈழத்தமிழர்களே சற்று மாறுதலுக்காகவேணும் பாக்கிஸ்தான் காரனை பிடிச்சு பாருங்கள். இனத்தான் இனத்தவனுக்கு உதவி செய்ய மாட்டான் என்பதற்க்கு கருணாநிதி தான் உதாரணம். அவரை போல நாலு நல்ல நாற்காலி பிசாசுகள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்வார்கள். எனவே தமிழ் நாட்டின் மக்களே அவரை போன்றோருக்கே வாக்களியுங்கள்.

ஈழத்தமிழன் குருதி எடுத்து சோனியா அம்மைக்கும், கருணாநிதி தாத்தாவுக்கு இரத்தா அபிசேகம் செய்யுங்கள் அப்போதாவது அவர்களை பிடித்த இந்திய இறமைச் வாதம் தீருகின்றதா பார்க்கலாம்..

கருகிக்கிடக்கும் எங்கள் சொந்தங்களை பார்த்த பின்னும் பதவி வேண்டிக்கிடக்கும் இந்த படு பாதகம் எந்த இனத்தில் நடக்கும்?

தமிழ் சொந்தங்களே,
தரணியேங்கும் நீங்கள் தளைத்திருக்கின்றீர்கள், தர்மத்தின் பால் அக்கறை கொண்ட உங்கள் மனசாட்சிக்கு முன் பரந்து விரிந்திருக்கும் பாரிய கேள்விக்கு பதில் தேடுங்கள்! இத்தனை நாட்களாய் நீங்கள் செய்த போராட்டங்களுக்கு, கவனயீர்ப்புக்கு என்ன பலன் கிடைத்தது?

நம்புங்கள் தமிழீழம் என்ற தனியரசைத் தவிர தமிழனை காக்கப் போவது ஒன்றுமில்லை. கருகிக்கிடக்கும் பிணக்குவியல்களை பாருங்கள், எரிந்து சிதைந்து கிடக்கும் உங்கள் உறவுகளைப்பாருங்கள்

இப்போது உங்கள் மனக்கண்ணைத் திறவுகள், உலக வல்லரசுகளுக்கு முன்னே தமிழீழத்தை அமைக்க உறுதி கொள்ளுங்கள், நாளை நான் பிணமாகலாம், இத்தனை லட்சம் மக்களும் எரிந்து போகலாம், ஆனாலும் நாளைய சந்ததிக்காய், ஏதிலிகளாய் அலையும் உங்களுக்காகவாவது நாட்டை அமையுங்கள்.!

நன்றி
வணக்கம்,
மின்னஞ்சலில் கிடைத்ததை பிரசுரம் செய்கின்றோம்

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.