Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, May 5, 2009

தலைவர் பிரபாகரன் தொடர் 3




பந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.

வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம். அழைத்தால் கலந்துகொள்ளும் வைபவமா அது? அத்தனை பேரும் தங்கள் மகள் திருமணமாகவே நினைத்தார்கள். பெரிய பெரிய கோலங்களால் வீதியை நிறைத்து, முகத்தில் புன்னகை ஏந்தி நல்வரவு சொன்னார்கள்.



வேலுப்பிள்ளைக்கு மட்டும் கவலையாக இருந்தது. தம்பியைக் காணோம். எங்கே போனான்? மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். பதிலில்லை. மூத்த மகன் மனோகரனிடம் கேட்டார். தெரியவில்லை. ஜகதீஸ்வரியிடம் கேட்டார். ம்ஹும். வினோதினி, உன்னிடமாவது சொல்லிவிட்டுப் போனானா?

தெரியவில்லையே அப்பா என்றார் கல்யாணப்பெண்.

அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை ராஜேந்திரன் கொழும்புவில் வேலை பார்க்கிறவர். ஓர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம். கௌரவமான குடும்பம். சம்பந்தம் அமைந்தது தெய்வச் செயல்.


திருமணத்துக்கு வந்து இறங்கியதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கே உங்கள் கடைசிப் பிள்ளை பிரபாகரன்? கண்ணிலேயே தென்படவில்லையே?

வேலுப்பிள்ளைக்குக் கவலையாக இருந்தது. சில காலமாகவே பிரபாகரனின் நடவடிக்கைகள் அவருக்குக் குழப்பம் தந்தன. யார் யாரோ நண்பர்கள் என்று வருகிறார்கள். ரகசியமாகப் பேசுகிறார்கள். வழியனுப்புவது போல் வெளியே செல்பவன், பலமணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருகிறான். மாணவர் பேரவைக் கூட்டத்தில் பார்த்ததாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். யாழ்ப்பாணம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய அப்பு சைக்கிள் கடையின் பின்புறம், தண்டவாளத்தில் தனியே அமர்ந்திருந்தான் என்று சொல்வார்கள்.



அரசியல் ஆர்வம் இருந்தால் சரி. தடுப்பதற்கில்லை. பிரபாகரன் வயதை ஒத்த அத்தனை பிள்ளைகளுக்கும் இருக்கிற விஷயம். அவர்கள் மாணவர்கள். அரசால், புதிய கல்வித் துறைக் கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சிங்கள மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவதற்கென்றே தமிழ்ப் பையன்களை பலி கொடுக்கும் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். சும்மா இருந்துவிட முடியாது. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமே போகாத தலைமுறை ஒன்று உருவாகிவிடும்.

அதுதான் அரசின் விருப்பம். பெரிய விளைச்சலற்ற வடக்கு மாகாணத்தின் வளமை முழுதும் கல்வியால் வந்தது.

அதில்தான் கைவைக்கிறார்கள். நீ படிப்பது அபாயம். எங்கள் சிங்களப் பிள்ளைகள் படிக்காதிருந்தால் அபாயம். ஒதுங்கு.

இவனுக்கு வழி விடு. நீ தொண்ணூறு எடுத்தால் உனக்கு சீட். இவன் அறுபது எடுத்தாலே சீட்.




தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருந்த காலம் அது. பிரபாகரனும் கொதித்திருக்கலாம். தப்பில்லை. ஆனால், இந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஏன் இத்தனை பூடகம்? போராட்டக் கூட்டங்களை அறிவிக்கும் போஸ்டர் ஒட்டப் போகிறான் என்றால் வீட்டில் சொல்லிவிட்டே போகலாமே? தம்பி, நீ போஸ்டர்தானே ஒட்டுகிறாய்?

புன்னகைதான் பதில். அப்பா, கவலைப்படாதீர்கள். இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

சில நாள் சொன்னபடி பிரபாகரன் வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாள் வர முடியாமல் போய்விடும். முதலில் கவலைப்படுவார்கள். பிறகு பழகிவிட்டார்கள். ஆனால், சகோதரியின் திருமணத்துக்கு முதல்நாள் கூடவா?

தம்பி வந்துவிட்டானா? மாப்பிள்ளை வீட்டார் நாலைந்து முறை கேட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் ஆளைக் காணோம். எங்கே போய்விட்டாய், தம்பி?

வேலுப்பிள்ளை கவலையுடன் பின்புறம் சமையல் நடந்துகொண்டிருக்கும் பந்தலுக்குப் போனார். ஊர்ப் பெண்கள் எல்லோரும் கூடி கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலையிலிருந்து வாசனை மிதந்து வந்தது. இங்கே சாம்பார். அங்கே பாயசம். பச்சடி தயார். பொரியல் தயார். ரசம் தயார். யாரப்பா, வடை மாவில் உப்பு போட்டாகிவிட்டதா?

ஐயா, தம்பி வந்துவிட்டான். யாரோ சொன்னார்கள். ஆண்டவனே என்று ஒரு கணம் கண்ணை மூடி மனத்துக்குள் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே போனார் வேலுப்பிள்ளை.

பிரபாகரன், மாப்பிள்ளை ராஜேந்திரனின் அறையில் நின்றுகொண்டிருந்தார். வணக்கம். பயணமெல்லாம் சுகமாயிருந்தது தானே?

உயரம் சற்று மட்டுத்தான். ஆனால் உறுதியான தேகம். எதையும் தாங்கும் என்பது போல. கையைப் பிடித்துக் குலுக்கும்போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலிருக்கிறது. ஆனால், முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று. படித்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று. பிரபா, நீங்கள் என்ன படித்திருக்கீங்கள்? கேட்க நினைத்தார். ஏனோ மறந்துவிட்டது. இன்னொன்றும் கேட்க நினைத்தார். அக்கா கல்யாணத்துக்குக் கூட பக்கத்தில் இல்லாமல் அப்படியென்ன வேலை? அதையும் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை என்பதுதான் சரி.

தாமதமாக வந்தாலும் ஒரு பொறுப்புள்ள தம்பியாக, அந்தத் திருமணச் சடங்குகள் நிறைவடையும் வரை பிரபாகரன் பிறகு உடனிருந்தார். வேலுப்பிள்ளைக்கு நிம்மதி. வினோதினிக்கு சந்தோஷம். அம்மாவுக்குப் பெருமிதம். என்ன இருந்தாலும் பிள்ளை பக்கத்தில் இருப்பது ஒரு பலம் அல்லவா? இப்படியே இருந்துவிட்டால் தேவலை. அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் பிரபாகரன் அதிக சமயம் எடுக்கவில்லை. 1972-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒரு தினம். நியாயமாக சரித்திரம் அந்தத் தேதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அப்போது அவருக்கு வயது சரியாகப் பதினாறு. அதில் சந்தேகமில்லை.

இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?

ஒருவர் இருவர் மாதிரி தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்? பத்திருபது பேர்? அல்லது அதற்கும் மேலே? படுக்கையில் இருந்தபடி கண்ணைத் திறக்காமல் வேலுப்பிள்ளை குழம்பிக்கொண்டிருந்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தபோது மனைவியும் மகனும் சற்றுத்தள்ளி, பாயில் படுத்திருப்பது தெரிந்தது. நல்லவேளை, பிரபாகரன் இருக்கிறான்.

சில நிமிடங்களில் வெளியே கேட்ட சத்தம் வலுத்தது. பேச்சு சத்தம் மட்டுமல்ல. இப்போது நிறைய பூட்ஸ் சத்தமும் கேட்டது. எனவே, போலீஸ்.

கதவை அவர் திறந்ததுதான் தாமதம். தடதடவென்று இருபது, இருபத்தைந்து போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

ஏய், என்ன நடக்கிறது? இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் வேலுப்பிள்ளை. மாவட்ட நிலவள அதிகாரி. நீங்கள் தேடும்படியாக என் வீட்டில் ஏதுமில்லை.

இன்ஸ்பெக்டர் ஒருவர் மெல்ல அவர் அருகே வந்து, நிறுத்தி நிதானமாகக் கேட்டார். எங்கே உங்கள் பிள்ளை பிரபாகரன்?

திக்கென்றது வேலுப்பிள்ளைக்கு. பேச்சு வராமல் உள்ளே கைகாட்டினார்.

சற்றுமுன் அவர் பார்த்த இடத்தில், ஒரு தலையணையும் பாயும்தான் இருந்தன. தம்பி இல்லை..

தொடரும்...

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.