Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Saturday, April 11, 2009

சிந்திக்காத சிங்களம்; இதுவரை சந்திக்காத சமர்க்களம்!

இன்று போர்வெறி பிடித்து கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு. வெற்றிக்களிப்பில் திளைத்துப்போயிருக்கும் அதன் செயற்பாடுகள் பின்விளைவுகள், எதிர்விளைவுகளை பற்றி துளியெயேனும் சிந்திக்காத விதமாக அமைந்திருக்கிறது. “தானே உலகின் வல்லரசு” என்ற பாணியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்து திமிருடன் பேசிவருகிறது. இந்நிலையில், இதுவரைகாலமும் சந்திக்காத சமர்க்களங்களை சந்திக்கப்போகிறது சிங்களதேசம்.


தமிழினம் மீது வில்லங்கமாகவே திணிக்கப்பட்ட போரில் தமிழினம் அதிகமாகவே இழந்துவிட்டது. “புலிகளை ஒழிக்கின்றோம்” என்று சொ ல்லிகொண்டு தமிழினத்தின் மீது இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அப்பாவித் தமிழர்களின் அழிவுகளை, இழப்புக்களை தமது மாபெரும் வெற்றிகளாக பிரகடனப்படுத்தியும் வருகின்றது. ஆனால் அதுவே தங்களுக்கெதிராக உருவெடுத்து நிற்குமென எள்ளளவேனும் சிந்தித்துப் பார்த்திருக்காது சிங்கள அரசு. தப்பான கணிப்பு, எதேச்சைத்தனமான போக்கு மற்றும் போர்வெறிக் கொள்கை என்பவற்றுடன் வலம்வரும் சிங்கள அரசில், களயதார்த்தங்களை புரிந்து சிந்தித்து செயலாற்றக்கூடியவர்கள் யாருமே இல்லையென்பது பரிதாபமே!!!

சிங்கள அரசு தன் தகுதிக்கு மீறிய வகையில் போரை முன்னெடுத்துச் செல்லும் நிலையில், அதற்கு எதிராக அது இதுவரை சந்தித்திராத வித்தியாசமான இரு சமர்க்களங்கள் தமிழர் பக்கத்திடமிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. “இன்னும் சில நாட்களில் புலிகளை முற்றாக அழித்து சுதந்திர இலங்கையை உருவாக்குவோம்! இது நிரந்தர சமதானத்திற்கான யுத்தம், இதுவே இறுதிப்போர்” என சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு மஹிந்த அரசு சொன்ன பொய்க்கதைகள்தான், இப்போது தமிழர்கள் தங்கள் தாயகவிடுதலைக்கான இறுதிப்போராக இதை அறிவிக்கக் காரணமாக இருந்தது. இவ்வாறு சிங்கள அரசு சிந்திக்காமல் முட்டாள்தனமாக செய்த அனைத்து காரியங்களும் தமிழர்களது விடுதலைப்போரை மேலும் வீரியத்துடன் முன்னெடுத்து, உலகறியச் செய்வதற்கு உதவியுள்ளன என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் நன்மையான விடயமே.

இவ்வாறான கட்டத்தில் தமிழர்கள் சிங்கள அரசினை திணறடிக்கக்கூடிய வகையிலான இரு சமர்க்களங்களை சிங்களத்திற்கெதிராக திறந்து விட்டுள்ளனர். புலிகளும் வன்னி மக்களும் சேர்ந்து வன்னிச்சமர்க்களத்தையும், உலகம் பூராவும் பரந்துவாழும் புலம்பெயர் ஈழத்தமிழரும் அனைத்து உலகத்தமிழரும் சேர்ந்து சர்வதேசக்களத்தையும் உருவாக்கி தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான இறுதிப்போருக்கு தயாராகி நிற்கின்றார்கள்.

வன்னிச்சமர்க்களம் இலங்கை இராணுவத்தினைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் கண்டிராத சந்தித்திராத ஒரு களம். ஏனெனில், என்றுமில்லாதவாறு புலிகள் பின்வாங்கி ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் தங்களை நிலைப்படுத்தியிருக்கின்றார்கள். அவர்களது அனைத்து பலங்களும் வளங்களும் அச்சிறியநிலப்பரப்புக்குள்ளேயே குவிக்கப்பட்டிருக்கிறது. வன்னி மக்களும் அதற்குள்ளேயே இருக்கின்றார்கள். தமது நிலப்பரப்பினை பெருமளவில் இழந்திருந்தாலும் புலிகளின் உளவுரண் குறைந்ததாகவும் தெரியவில்லை.அவர்களின் தாக்குதல் உக்கிரம் மேன்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

அண்மையில் வன்னிச்சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் அறிக்கைகளின்படி, புலிகளின் தாக்குதல் உக்கிரமடைந்து வருவதுடன் அவர்கள் தமது கனரக ஆயுதங்களையும் பாவிக்க தொடங்கியுள்ளனர் என தெரியவருகின்றது. இதுவரை காலமும் எந்தவொரு சண்டையிலும் பயன்படுத்தப்படாத புதியவகை ஆயுதங்களையும், படையணிகளையும் புலிகள் பேணிக்காத்து வருகிறார்கள் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். ஏற்கனவே பல இடங்களில் இழப்புக்களை சந்தித்து சிதைந்து போயிருக்கும் இராணுவத்தின் தாக்குதல் படையணிகளை ஒருவாறு ஒழுங்கமைத்து எப்படியாவது, கடைசியாக புலிகளிடமுள்ள பிரதேசத்தையும் பிடித்துவிடலாம் என்ற கனவில் சிங்கள இராணுவம் இருக்கின்ற நிலையில், புலிகளோ தாம் இழந்த நிலங்களை மீட்பதற்கான, தாக்குதலுக்குரிய ஒழுங்கமைப்புக்களை ஏறத்தாழ முடித்துவிட்டதாகவே தெரிகிறது. புலிகளின் பலம் வாய்ந்த, போர்த்தேர்ச்சி பெற்ற பல தாக்குதல் அணிகள் தத்தமக்குரிய இடங்களில் நிலைகொண்டு விட்டனர். இதில், ஏற்கனவே இராணுவ பகுதிக்குள் ஊடுருவியுள்ள அணிகளும் அடங்கும்.புலிகளின் புதுவிதமான களவியூகத்திற்குள் சிக்கியிருக்கும் இராணுவத்திற்கு இது ஒரு புதிய சமர்க்களம். ஆனால் அங்குள்ள படையினரில் பெரும்பாலானோர் அண்மைக்காலங்களில் புதிதாக படைக்கு சேர்க்கப்பட்டவர்கள்.அவர்களுக்கு இச்சமர்க்களம் புதிதாய் இருக்கும் என்று சொல்வதைவிட புதிராய் இருக்கும் என்று சொல்லுவதே பொருந்தும்.

சாதாரணமாகவே, புலிகள் ஒருபடி மட்டுங்கொண்ட களவியூகங்களை நம்பியிருக்க மாட்டார்கள். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று என பல களவியூகங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இறுதிப் போரில் புலிகளின் வியூகங்கள் எப்படி இருக்கும் என்பதை யாரும் சொல்லிப் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அது என்வென்பதையோ அதன் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பதையோ எவரினாலும் ஊகித்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் இறுதிப்போர் என்று புலிகள் முடிவெடுத்துவிட்ட பின்னர் அவர்களின் தாக்குதல் உக்கிரம் அதியுச்ச நிலையில் இருக்கும் என்பதுவும் உறுதி. எனவே என்றுமில்லாதவாறான கள அமைப்பையும் என்றுமே சந்தித்திராத புலிகளின் உக்கிரமான எதிர்ப்பையும் சந்திக்கவேண்டிய இக்கட்டான நிலையில் சிங்கள இராணுவம் திணறிக்கொண்டிருக்கிறது. இதுவரைகாலமும் சந்தித்திராததொரு சமர்களமாகத் தற்போது திகழும் வன்னிச் சமர்க்களம் சிங்கள இராணுவத்திற்கு இதுவரைக்கும் சந்தித்திராத பயங்கர அனுபவங்களை கொடுக்கப்போவது நிச்சயம்.

இலங்கையரசு முகங்கொடுக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அடுத்த சமர்க்களம் சர்வதேசக் களம். புலம்பெயர் ஈழத்தமிழரும் தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துலகத் தமிழரும் சேர்ந்து ஒன்றுதிரண்டு முன்னெடுத்துவரும் சர்வதேச நாடுகளை நோக்கியதான போராட்டங்களினால் இலங்கை அரசு நிலைகுழம்பிப் போயுள்ளது. இவ்வளவு காலமும் இலங்கைக்கு ஆதரவான கொள்கையை கடைப்பிடித்துவந்த அமெரிக்கா,கனடா, அவுஸ்ரேலியா,பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என பெரும்பாலான நாடுகள் தற்போது தமது இலங்கை ஆதரவுக் கொள்கையில் மாற்றங்களை காட்டத் தொடங்கியுள்ளன. இதற்கு முக்கியமான மூலகாரணமாக இருந்தது, தமிழர்கள் சர்வதேசக்களத்தில் அரங்கேற்றிவரும் இடைவிடாத போராட்டங்கள்தான். இலங்கை அரசின் அட்டூழியங்கள் , இன அழிப்பு நடவடிக்கைகள் என அனைத்தையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். சிங்களத்தின் கொடிய கொலைக்கரங்கள் விட்டுச்சென்ற சாட்சிகள் காட்சிகளை கொண்டே அதன் முகத்திரையை கிழித்தெறியத் தொடங்கியுள்ளனர். கண்மூடி வாய்மூடி பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசம் இப்போது அவற்றை மெல்லத் திறந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே, இன்று இலங்கை விவகாரம் ஐ.நா சபை வரை சென்றிருக்கிறது. ஆரம்பத்தில் உலகத்தமிழரின் போராட்டங்களை சாதாரணமாக நினைத்த சிங்கள அரசு அதனைக் கருத்தில் எடுக்கவில்லை. முன்னைய காலங்களைப்போல ஓரிரெண்டு தடவைகள் கூட்டங்கூட்டுவார்கள், அதன்பின்பு ஓய்ந்து விடுவார்கள் என்றே நினைத்திருந்தது. ஆனால் உலகத்தமிழர்கள் தமக்கெதிராக ஓயாத போராட்டமொன்றினை சர்வதேசக் களத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற உண்மையை காலந்தாழ்த்தியே புரிந்துகொண்டிருக்கிறது.

இதுவரைகாலமும் இதைப்பற்றியே சிந்திக்காமல் இருந்த சிங்கள அரசு, இப்போராட்டங்கள் இப்படியே தொடர்ந்தால் அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் என சிந்தித்துப் பார்த்து அரண்டுபோய் நிற்கின்றது. அவற்றை எப்படி முறியடிப்பது? என சிந்தித்து முடியாமல் முழிக்கிறது. சர்வதேசத்தின் கண்டனக்கணைகள் பாயத்தொடங்கிவிட்ட நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தும் வழி தெரியாமல் தவிக்கிறது.இவற்றினுடைய பாதிப்புக்களின் வெளிப்பாடு இலங்கை ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸவின் வாயிலிருந்தே வெளிவந்திருக்கிறது.

“இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளினால் சர்வதேசரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய இராஜதந்திர செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் , புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு உகந்த முறையில் பதிலடி கொடுக்க இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்களை தயார் படுத்தி , அவற்றின் ஊடாக புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்” என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அவர் இங்கு “புலிகள்” என்று குறிப்பிட்டிருப்பது போராட்டங்களை முன்னெடுக்கும் உலகத் தமிழர்களைத்தான். இதுவரை நாளும் சிந்திக்காமல் தூங்கிக் கொண்டிருந்த சிங்களம் இப்போது சர்வதேசக் களத்தில் பிரச்சாரப் போரை சந்திக்கத் தயாராகிவிட்டது. ஆனால் உலகத்தமிழ்மக்கள் எதற்கும் துணிந்து விட்டார்கள். அவர்களின் போராட்டத்தினை இன்னும் வீரியப்படுத்தி ஓயாமல் போராட திடசங்கற்பம் பூண்டுவிட்டார்கள். இதுவரை சிங்களதேசம் கண்டிராத எழுச்சிப் பிரவாகங்களை உலகத்தமிழரின் இச்சர்வதேச களத்தினில் கண்டு கதிகலங்கப் போகிறது.

ஒரு விடயத்தினை தமிழர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். அது என்னவெனில், யுத்தவெற்றிகள் மூலம் பெறப்படும் சாதகமான விளைவுகளைவிட சர்வதேச ஆதரவு திரட்டப்பட்டு சர்வதேச அங்கீகாரம் மூலம் பெறப்படும் சாதகமான விளைவுகள்தான் தமிழரின் தாயகம் “தமிழீழம்” தனிநாடாக உருவாக மிகவும் உதவும் என்பதாகும். எனவே தன்மானமிக்க தமிழர்களாக ஒவ்வொருவரும் சர்வதேசக் களத்தில் இறங்கி உணர்வெழுச்சியுடன் போராடவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவும் கடமையாகவும் அமைகிறது.

சிந்திக்காமல் தமிழினத்தினை சின்னாபின்னப்படுத்திவந்த சிங்கள தேசம் இன்று முழுமூச்சுடன் சண்டைக்கு வந்து நிற்கின்றது. அது இதுவரைகாலமும் சந்திக்காத சமர்க்களங்களை களத்திலும் புலத்திலும் அதற்கெதிராக முன்னெடுத்திருக்கும் தமிழர்கள் அச்சமர்க்களங்களில் ஈட்டப்போகும் வெற்றிகள்தான் நாளை தமிழீழ தேசம் உருவாவதற்கு வழி சமைக்கும்.இதை மனதில் நிறுத்தி, அனைவரும் காலத்தின் தேவையறிந்து களமறிந்து பேரெழுச்சியுடன் போராடவேண்டியது மிக அவசியம்.

இறுதிப் போரிது; நம் உரிமைப் போரிது!
அறுதியிட்டு கூறுவோம் - சர்வதேசமே!!!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.