Tuesday, May 5, 2009
தலைவர் பிரபாகரன் தொடர் 11
மன்னிக்கவேண்டும். நீங்கள் சாக அனுமதிப்பதற்கில்லை என்றார்' பிரபாகரன்.
நான்கு பெண்களும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் நான்கு கோபங்கள். இதே உண்ணாவிரதம் கூடாது என்று அரசாங்கக் காவல் துறையினர் வந்து இழுத்துச் செல்வார்கள் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். போகிற வழியில் தர்ணா செய்யலாம். லாக்கப்பில் கலாட்டா செய்யலாம். கோர்ட்டில் கோஷம் போடலாம், சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கலாம், செய்தி வெளியே வரும், விஷயம் பெரிதாகும், மக்கள் திரண்டு ஊர்வலம் போவார்கள், கல்லூரி காலவரையறையற்று மூடப்படும் என்று அடுத்தடுத்த திட்டங்கள் தயார்.
எதிர்பார்க்கவில்லை. இப்படி இழுத்து வந்து வலுக்கட்டாயமாகச் சாப்பிடவைத்து போதனை செய்யும் இந்த மனிதர் யார்?
என் பெயர் பிரபாகரன் என்றார் பிரபாகரன். கேள்விப்பட்டிருந்தார்கள். பார்த்ததில்லை. இவரா? சே. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் இத்தனை குள்ளமாக, கட்டை குட்டையாக, மெல்லிய குரலில் பேசிக்கொண்டு... பார்த்தால் குண்டு வைக்கக்கூடிய ஆசாமிபோல் தெரியவில்லையே? குரலில் என்ன ஒரு மிருது!
சுற்றி இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அன்பான பேச்சு. கனிவான பார்வை. துடிப்பான கண்காணிப்பு. உயிர் விலைமதிப்பற்றது. வீணாக அதனை இழக்கக்கூடாது. உங்களை நான் தமிழகத்துக்கு அனுப்புகிறேன். தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைத்தால் உருப்படியாகச் செய்யுங்கள். சம்மதமா? சம்மதித்தார்கள். தோணி ஏறினார்கள்.
மதிவதனி, வினோஜா, லலிதா, ஜெயா என்கிற அந்த நான்கு பெண்களும் கோடியக்கரை வரைக்கும் தோணியில் வந்து அங்கிருந்து பஸ் பிடித்துச் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, அழைத்துச்சென்று தங்கவைக்கும் பொறுப்பு திருமதி அடேல் பாலசிங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
திருவான்மியூர் வீட்டில் நான்கு பெண்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டது. பாலசிங்கம் தன் மனைவியைத் தனியே கூப்பிட்டுச் சொன்னார். கவனம். யாழ்ப்பாணத்து ஒழுக்க விதிகள் ரொம்பக் கடுமையானவை. திருமணமாகாத பெண்களை நாம் ஆயுதங்களைப் பாதுகாப்பதுபோல் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். ஆண்களுடன் பேசுவது, பழகுவது, அவர்கள் புழங்கும் இடத்தில் சகஜமாக வந்து போவதற்குக் கூட கண், காது, மூக்கு வைத்துவிடுவார்கள். தம்பி, உன் பொறுப்பு என்று சொன்னது அவர்களது நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல. எதிர்காலத்துக்கும் சேர்த்து.
அடேலும் பெண் தான். ஆனால் ஆஸ்திரேலியப் பெண். லண்டனில் வசித்த பெண். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண். அவர் யாழ்ப்பாணத்து மக்களை அப்போதுதான் படித்துக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் முகாமில் முதல் முதலில் அவர் வந்து சேர்ந்தபோதே நிறைய சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருந்தது.
ஒருவழியாகப் பிரபாகரன் அவரை `அன்ரி' (ஆண்ட்டி) என்று அழைத்து ஆரம்பித்துவைக்க, அதுவே அவரது நிரந்தர உறவு முறையாயிற்று.
ஆனால் இந்தப் பெண்கள்?
பிரபாகரன் வந்தார். அனைவருக்கும் அந்த நான்கு பேரையும் அறிமுகம் செய்துவைத்தார். இனி இவர்களும் நம்மைச் சேர்ந்தவர்கள். சமையலில், பிற வேலைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆயுதம் பழக விரும்பினால் ரொம்ப சந்தோஷம். கற்றுக்கொடுங்கள். இன்னும் சில பெண்கள் விரைவில் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது. வந்தார்கள். ஒருவர் இருவரல்லர். நிறையவே வந்தார்கள். தமிழகத்தில் பயிற்சி, ஈழத்தில் யுத்தம், வாருங்கள் என்று.
`டெலோ' கூப்பிட்டு நிறையப் பெண்கள் தோணி ஏறியிருந்தார்கள். கல்லூரிப் பெண்கள். படிப்பை விட்ட, படித்து முடித்த பெண்கள். துரதிருஷ்டவசமாக அவர்களைத் தமிழகத்தில் தங்க வைக்கவோ, முறையான பயிற்சியளிக்கவோ டெலோ ஏற்பாடு செய்யத் தவறியிருந்தது. என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களுக்குப் பிரபாகரன் ஒரு மூத்த சகோதரன் போல நின்று அழைத்தது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.
அத்தனைபேரும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் அடைக்கலமானார்கள். திருவான்மியூரில் தங்குமிடம். சென்னைக்கு வெளியே பல இடங்களில் பயிற்சி. போவார்கள், வருவார்கள், சமைப்பார்கள், சாப்பிடுவார்கள். பேசித் தீர்த்துவிட்டுப் படுத்துத் தூங்கினால் மறுநாள் மீண்டும் பயிற்சி.
பிரபாகரன் வருவார். அனைவருடனும் பேசுவார். உற்சாகமான, நம்பிக்கையூட்டக்கூடிய அற்புதமான பேச்சுகள். அனைவரையும் கூப்பிட்டு உட்காரவைத்து கோழியடித்துக் குழம்பு வைப்பார். பாலசிங்கம் மீன் சமைப்பதில் கில்லாடி.
வேறு பல தோழர்கள் கறிகாய் நறுக்குவார்கள். கடைக்குப் போவார்கள். துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி, சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார்.
`அன்ரி, நீங்களும் ஏன் பிஸ்டல் சுடக் கற்கக்கூடாது?' பிரபாகரன் ஒருநாள் கேட்டார். அவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முடித்துத் திரும்பிய ஒருநாள் தற்செயலாகப் பிரபாகரன் சொன்னார். `நான் மதிவதனியை விரும்புகிறேன்.'
ஒரு கண்ணிவெடிகூட அத்தனை அதிரச் செய்திருக்க முடியாது. இயற்கை என்ன இலங்கை அரசா? எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க? ஆனால் ஆரம்பத்தில் யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்துகொள்ள யாரும் விரும்பவில்லை. அன்றைக்கு உமா மகேஸ்வரனை அத்தனை கேள்வி கேட்டாயே, இன்றைக்கு உன் காதல் அத்தனை முக்கியமாகிப் போய்விட்டதா என்றுதான் பெரும்பாலானோர் கேட்டார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கம் காதலுக்கு எதிரியல்ல. காதலித்துக்கொண்டே காலம் கழிப்பதற்கோ, கழட்டிவிட்டுவிட்டுப் போய்விடுவதற்கோதான் எதிரி. ஒரு பெண்ணைப் பிடிக்கிறதா? கூப்பிட்டுப் பேசு. பெண்ணிடமல்ல. பெற்றோரிடம். புரியவை. மணந்துகொள். தீர்ந்தது விஷயம்.
ஆனால், உமா மகேஸ்வரன் பாதித்திருந்தார். மிகவும் பாதித்திருந்தார். இயக்கத்திலிருந்து அவரை வெளியேற்றியது, அவர் ப்ளாட் இயக்கம் கண்டது, ஒரு பெரும் படை அவருடன் போனது, பல வெளிநாட்டுத் தொடர்புகள் அவருடன் சென்றது எல்லாம், எல்லாமே எல்லோரையும் பாதித்திருந்தன. அதனால், பிரபாகரனுக்குக் காதல் என்றபோது சுற்றி நின்று கேள்வி கேட்டார்கள். சொற்களில் கோபம் சேர்த்து, சுற்றிச் சுற்றி அடித்தார்கள்.
பிரபாகரன் அனைவருக்கும் பொறுமையாக பதில் சொன்னார். ஆமாம், காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். நீங்களும் காதலிக்கலாம். திருமணம் செய்துகொள்ளலாம். திருமணத்தை நாம் தடுப்பதே இல்லை.
பாலசிங்கம் இயக்கத்தில் ஒவ்வொருவரிடமும் தனியே பேசினார். பேசிப்பேசிப் புரியவைத்தார். காதல் இயற்கையானது. திருமண உறவு ஆரோக்கியமானது. அதற்குத் தடைபோடுவதன்மூலம் எதையும் பெரிதாகச் சாதித்துவிட முடியாது. முறையற்ற உறவைத்தான் கூடாது என்று சொல்கிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
பலர் புரிந்துகொண்டார்கள். சிலர் புரிந்துகொள்ள மறுத்தார்கள். பெரிய களேபரத்துக்குப் பிறகுதான் பிரபாகரன் மதிவதனி திருமணம் நடந்தது.
மதிவதனியின் பெற்றோர் புங்குடுத் தீவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தனர். பாலசிங்கம் அவர்களுடன் உட்கார்ந்து பேசிப் புரியவைத்திருந்தார். 1984-ம் வருடம் அக்டோபர் முதல் தேதி. திருப்போரூர் முருகன் கோயிலில் மிக எளிமையாக நடந்த திருமணம் அது. குறைந்தபட்ச உறவினர்கள், குறைந்தபட்ச நண்பர்கள்.
திருமணம் முடிந்தபிறகும்கூட இயக்கத்தில் பலரால் அதை நம்பமுடியாமலேயே இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு உலகெங்கும் பரவத் தொடங்கியிருந்த காலம் அது. லண்டனில் புலிகள் இருந்தார்கள். பிரான்ஸில் இருந்தார்கள். ஸ்விட்சர்லாந்தில் இருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் பரவியிருந்தார்கள். தகவல் ஒவ்வொரு இடமாகப் போகப் போக, அத்தனை பேரும் நிஜமா, நிஜமா என்று நம்பமுடியாமல்தான் கேட்டார்கள்.
இந்தக் கட்டத்தில் பாலசிங்கம் செய்த உதவி மகத்தானது. அவர்தான் பேசினார். அவர் மட்டும்தான் பேசினார். பேசிப்பேசிப் புரியவைத்தார். தனி மனித உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப் பழகுங்கள். அப்படிக் கொடுக்காத சந்தர்ப்பங்கள் அனைத்தும் விரிசலை உண்டாக்கியிருக்கின்றன. தனி வாழ்க்கை ஒழுங்காக இருந்தால்தான் இயக்கமாகச் செயல்படும்போது முழுக்கவனம் செலுத்த முடியும்.
ஒன்று சொல்லவேண்டும். பிரபாகரன் மாதிரி ஒரு செயல்வெறி கொண்ட வீரரைத் திருமணம் செய்துகொள்ள ஒரு துணிச்சல் வேண்டும். தன்னைத்தானே நாட்டுக்கு நேர்ந்துவிட்டுக்கொண்டவரின் வீட்டை ஆள்வதென்பது சாதாரண செயலல்ல. விவசாய விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த மதிவதனி அதன்பின் வீட்டு நிர்வாக விஞ்ஞானம் பயில ஆரம்பித்தார்.
மூன்று குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. சார்ல்ஸ் ஆண்டனி, துவாரகா, பாலச்சந்திரன். மூன்றுமே மாவீரர்களின் பெயர்கள். (பாலச்சந்திரன் என்பவர் மதிவதனியின் சகோதரர். அவரும் புலிகள் இயக்கத்தில் இருந்து வீரமரணம் அடைந்தவர்தான்.)
வாழ்நாளில் பெரும்பகுதி கானகத்தில். இன்று உறங்கும் இடத்தில் நாளை இருப்போமா என்று தெரியாது. இன்று கிடைத்த உணவு நாளை கிடைக்குமா தெரியாது. இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்றும் தெரியாது.
அதனாலென்ன? இந்த வாழ்க்கையும் இனிக்கத்தான் செய்கிறது. ஓய்வான சமயங்களில் பிரபாகரன் வீட்டு வேலைகளும் பார்த்தார். கோழியடித்துக் குழம்பு வைக்க இப்போதும் தயங்குவதில்லை. வாருங்கள், ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றால், இரு என்று ஓடிச் சென்று ஒரு பூந்தொட்டியை எடுத்துவந்து அருகே வைத்துக்கொண்டு, ம், எடு என்னும் குழந்தைத்தனம் அப்படியேதான் இருக்கிறது, தன்னால் ஒழுங்காக இங்கிலீஷ் பேசமுடியவில்லையே என்கிற வருத்தத்தைப் போலவே.
ஆ, அது ஒரு தீராத வருத்தம். அடிக்கடி சொல்லி ஏங்குவார். மதிவதனி கமுக்கமாகச் சிரிப்பார். சர்வதேசத் தலைவர்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சகஜமாகப் பேசமுடியாமல் என்ன ஒரு சிக்கல்! யாராவது இங்கிலீஷ் தெரிந்தவர்கள் உடன் இருந்தே தீரவேண்டியிருக்கிறது. சே. படித்திருக்கலாம்.
டே தம்பி, நீயாவது படி என்று மகனை முழு மூச்சில் படிக்க வைத்தார். சார்ல்ஸ் ஆண்டனி யாழ்ப்பாணத்தில் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது, அவரது தனிப்பாடம், விருப்பப்பாடம் ஆங்கிலம். அந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலப் பரீட்சை எழுதிய ஒரே மாணவன் சார்ல்ஸ் ஆண்டனிதான்.
அவருக்காக ஒரே ஒரு கேள்வித்தாள் தனியாக வந்தது!.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment