Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Wednesday, April 15, 2009

புதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு வழி செய்யுமா?


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை' கைப்பற்றுவதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளில் அரச படைகள் இறங்கியிருக்கின்றன. புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதி முற்றாகப் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது புலிகள் வசம் 18 சதுர கி.மீ பிரதேசமே எஞ்சியிருப்பதாகவும், அதைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் படையினர் இறங்கியிருப்பதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிலும் 53ஆவது டிவிசன், 55ஆவது டிவிசன், 58ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், 68ஆவது டிவிசன் என இராணுவத்தின் ஐந்து டிவிசன்கள் எல்லையிட்டு நிற்கின்றன.

இதற்கடுத்த நிலையில் 57ஆவது டிவிசன், 62ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகிய நான்கு டிவிசன்கள் இரண்டாவது கட்ட பாதுகாப்பு நிலைகளை அமைத்து நிலைகொண்டிருக்கின்றன.

59ஆவது டிவிசன் வட்டுவாகல் பாலத்துக்குத் தெற்கே நிலைகொண்டிருப்பினும் அது வலிந்த தாக்குதல்களை நடத்தும் நோக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை நந்திக் கடலோரமாக முன்னகர்ந்த 53ஆவது டிவிசனின் எயர் மொபைல் பிரிகேட் மற்றும் 681 பிரிகேட் என்பன இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியை நெருங்கி நிலைகொண்டிருக்கின்றன.

இதற்கடுத்து அம்பலவன்பொக்கணைப் பகுதியை நெருங்கி 58ஆவது டிவிசன் நிலைகொண்டிருக்கிறது. புதுமாத்தளனுக்குத் தெற்கே பாதுகாப்பு வலயத்துக்கு அருகே முன்னேறியிருக்கிறது 55ஆவது டிவிசன்.

இந்த நான்கு டிவிசன்களும் எப்போதும் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என்ற நிலையே இந்தப் பத்தியை எழுதும் வரை இருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டதாகப் படைத்தரப்பு கூறியிருந்தாலும் அது முழுவேகத்தில் நடக்கின்ற முயற்சியாகத் தெரியவில்லை.

ஆனால், பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அவர்கள் பெருந்தொகையில் ஒலிபெருக்கிகளை முன்னரங்கில் பொருத்தி சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதுடன் தமது பிரதேசத்துக்குள் வருமாறும் அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற பாடல் அடிக்கடி திரும்பத் திரும்ப ஒலிக்க விடப்படுகிறது.

அதேவேளை அடுத்த சில தினங்களில் பெருந்தொகையான மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவர முடியும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இது இந்த நிலையில் இருக்க, கடந்தவாரம் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற பெரும் சமர் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்களில் கருதப்படுகிறது. இனிமேல் புலிகளால் தலையெடுக்க முடியாதென்ற அளவுக்கு அவர்களின் முதுகெலும்பை முறித்து விட்டதாகக் கூட அவர்களிடத்தில் அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இது எந்தளவுக்கு சரியானது என்பதைக் காலப்போக்கில் தான் அறிந்து கொள்ள முடியும்.

கடந்த 4ஆம் ,5ஆம் திகதிகளில் ஆனந்தபுரம் பகுதியில் சிலநூறு சதுர மீற்றர் பிரதேசத்துக்குள் சிக்கியிருந்த, புலிகளை அழிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிராத ஒன்றாகும்.

இதற்கு முன்னர் இலங்கை இராணுவம் பாரியளவிலான வலிந்த தாக்குதல்கள் பலவற்றை நடத்தியிருப்பினும் அது பல கி.மீற்றர் பரந்த பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஒரு சதுர கி.மீற்றருக்கும் குறைந்த பிரதேசத்துக்குள் அதிகளவு படையினர் களமிறக்கப்பட்ட தாக்குதல் ஆனந்தபுரம் பெரும்சமர் தான்.

இந்தத் தாக்குதலின் ஆரம்பத்தில் சுமார் 10 வரையான பற்றாலியன்களைச் சேர்ந்த படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் உள்ளேயிருந்த புலிகளின் எதிர்ப்பு அதிகமாக அதிகமாக படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நடவடிக்கை முற்றுப் பெற்றபோது குறைந்தது 15 ஆயிரம் படையினரேனும் அந்தப் பகுதியில் இருந்திருக்கின்றனர்.

முதற்கட்டமாக லெப்.கேணல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான 1ஆவது விசேட படைப்பிரிவு,

லெப்.கேணல் ஜெயந்த பாலசூரியவின் தலைமையிலான 2ஆவது கொமாண்டோ றெஜிமென்ட் ஆகியவற்றுடன்

லெப்.கேணல் வஜிர வெலகெதரவின் தலைமையிலான 8ஆவது கெமுனுவோச்,

லெப்.கேணல் லால் சந்திரசிறியின் தலைமையிலான 9ஆவது கெமுனுவோச்,

மேஜர் சம்பத் எக்கநாயக்கவின் தலைமையிலான 12ஆவது கெமுனு வோச்,

லெப்.கேணல் மணிந்திரவின் தலைமையிலான 6ஆவது கஜபா றெஜிமென்ட்,

லெப்.கேணல் சந்திர விக்கிரமசிங்கவின் தலைமையிலான 8ஆவது கஜபா றெஜிமென்ட்,

லெப்.கேணல் குமார பீரிஸின் தலைமையிலான 20ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியன தேடியழிப்பு நடவடிக்கையில் இறக்கப்பட்டன.

அதேவேளை 11ஆவது இலகு காலாட்படைப் பிரிவும், 5ஆவது விஜயபா காலாட்படைப்பிரிவும் முற்றுகையை உடைத்துக் கொண்டு புலிகளை வெளியேறிச் செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

புலிகளின் வலு முற்றுகை வலயத்துக்குள் அதிகமாக இருந்ததால் மேலதிக படையினரைக் களமிறக்கப் படைத்தலைமை தீர்மானித்தது.

53ஆவது டிவிசன் எயர் மொபைல் பிரிகேட்டைச் சேர்ந்த லெப்.கேணல் அஜந்த விஜேசூரியவின் தலைமையிலான 1ஆவது கெமுனுவோச், மற்றும் 2ஆவது விசேட படைப்பிரிவு, 1ஆவது கஜபா, லெப்.கேணல் சமிந்த லாமஹேவவின் தலைமையிலான 7வது கெமுனுவோச் ஆகியவற்றைப் புதிதாகக் களமிறக்கியது.

அதேவேளை 58ஆவது டிவிசன் மேலதிகமாக லெப்.கேணல் சாலிய அமுனுகமவின் தலைமையிலான 12ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் பலேகும்புரவின் தலைமையிலான 14ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் கமால் பின்னவெலவின் தலைமையிலான 6ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் உபுல் சேனாரத் தலைமையிலான 4ஆவது கெமுனுவோச், 20ஆவது இலகு காலாட்படை ஆகியவற்றைக் களமிறக்கியது.

55ஆவது டிவிசன், 57ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகியவற்றில் இருந்து அவசர அவசரமாகப் படையினர் கொண்டு வரப்பட்டு சண்டையில் இறக்கப்பட்டனர்.

இவற்றை விட லெப்.கேணல் நிகால் சமரக்கோனின் 5ஆவது கவசப்படைப்பிரிவு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது. அத்துடன் பிரிகேடியர் நாபாகொடவின் தலைமையிலான ஆட்டிலறிப் படைப்பிரிவு இரவு பகலாக குண்டுமழை பொழிந்து உதவியது.

இந்தத் தாக்குதலில் பங்கெடுத்த துணைச் சேவைப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை தனி. புலிகளை முற்றுகையிட்டுத் தாக்கியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவ பற்றாலியன்களின் மொத்த எண்ணிக்கை 20 இற்கும் அதிகம் என்பது ஆச்சரியமளிக்கும் விடயம்.

சிறிய பகுதிக்குள் குறைந்தது 12ஆயிரம் காலாட்படையினரைக் கொண்டே இந்த அழித்தொழிப்புச் சமரைப் படைத்தரப்பு நடத்தியது.

இந்த அழித்தொழிப்பு நடவடிக்கையில் பங்கேற்ற பற்றாலியன்கள் அத்தனையும் சிறப்புப் பயிற்சி பெற்றது. அனுபவம் மிக்கது.

இராணுவத்தின் அனுபவம் மிக்க படைப்பிரிவுகள் அனைத்தும் களமிறக்கப்பட வேண்டியளவுக்கு அது கடினமான களமுனையாக இருந்தது.

அத்துடன் இந்தச் சமரில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட சேதங்களும் மிகமிக அதிகமென்றே தகவல்கள் கூறுகின்றன. படைத்தரப்போ புலிகளோ தமக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எதுவும் கூறவில்லை.

புலிகள் தரப்பில் 525 பேரின் சடலங்களை கைப்பற்றியதாகக் கூறியிருந்தது படைத்தலைமை. புலிகள் தரப்பில் கொல்லப்பட்டதாக, பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்த கேணல் தீபன், மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் விதுசா, சோதியா படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்கா, படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் கடாபி ஆகியோர் மூத்த தளபதிகளாகச் செயற்பட்டவர்கள்.

இவர்களில் துர்க்கா தவிர்ந்த ஏனைய மூவரும் ஜெயசிக்குறு காலத்திலேயே கேணல் நிலைத் தளபதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். தீச்சுவாலை முறியடிப்புச் சமரை அடுத்து 2001இல் துர்க்காவும் கேணலாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இவர்களைவிட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி நாகேஸ், ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி, கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி மணிவண்ணன், குட்டிசிறி மோட்டார் படையணியின் சிறப்புத் தளபதி கோபால், மணலாறு பகுதி தளபதிகளான சித்திராங்கன், ஆதித்யன், ராதா படையணித் தளபதி சிலம்பரசன், சோதியா படையணியின் தளபதி மோகனா, மற்றும் தளபதி ரூபன் என கொல்லப்பட்ட புலிகளின் தளபதிகள் என்று பட்டியலைக் காட்டியது படைத்தரப்பு.

தாக்குதல் நடந்து பல நாட்கள் கழிந்த நிலையில் குட்டிறிசிறி மோட்டார் படையணியைச் சேர்ந்த அமுதா, ராதா படையணியின் சிரேஷ்ட தளபதி இனியவன், திருமலை புலனாய்வு பிரிவு தலைவர் அன்ரன், புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த மாங்குயில், நேரு என்று கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ராதா படையணித் துணைத் தளபதி அன்பு, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு தளபதியான அஸ்வினி போன்றோர் கொல்லப்பட்டதாக இராணுவ இணையத்தளம் கூறியிருந்த போதும் இவர்கள் காயமடைந்தாக தகவல் வெளியிட்டிருந்தது பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்.

படைதரப்பு வெளியிட்ட இந்தத் தகவலைப் புலிகள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. புலிகளின் இத்தனை தளபதிகளும் இறந்தது உண்மையானால் அது புலிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும்.

சுபத்ரா

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.