Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Monday, April 6, 2009

தொழில்நுட்பத்திலும் மிரட்டும் புலிகள்!

விமானம் தயாரிக்கும் புலிகள்: மிரண்டு நிற்கும் சிங்களர்கள்!

மிழீழ விடுதலைப் புலிகளின் உள்கட்டமைப்புகள், சுயேச்சையான அவர்களது போர் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பார்த்து மிரண்டு போய் நிற்கிறது சிங்கள ராணுவம்.

தங்களின் போராட்டங்கள் மற்றும் ஆயுதத் தேவைக்கு முழுவதுமாக வெளிநாட்டு ஆயுதங்களை நம்பியிராமல், சொந்தமாகவே ஆயுதங்களைத் தயாரித்துள்ளனர் விடுதலைப் புலிகள். மேலும் பல பகுதிகளில் குட்டிக் குட்டி இடமாக இருந்தாலும் அதை பெரும் ராணுவ ஆயுத உற்பத்திக் கூடமாகவே மாற்றியுள்ளனர்.

பீரங்கிகள், வெடிகுண்டுகள் போன்றவை பெரும்பாலும் புலிகளின் கைவண்ணத்திலேயே உருவாகியுள்ளன. முக்கியமாக கடற்புலிகளின் சிறு கப்பல் மற்றும் படகு கட்டுமானப் பகுதிகளைப் பார்த்து இலங்கை ராணுவம் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளும் மிரண்டு போயிருப்பதே உண்மை. நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்துக்கு இலங்கை அரசே வெளிநாட்டு உதவிக்காக கையேந்தி நிற்கையில், புலிகளோ சகல வசதிகளும் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், நீர்மூழ்கி ஸ்கூட்டர்களை முல்லைத் தீவில் உருவாக்கி வந்துள்ளனர்.

பொதுவாக பிற நாடுகளில் இயங்கும் விடுதலைப் போராட்டக் குழுக்கள் ஒட்டுண்ணிகளாகவே இயங்கி வருகின்றன. இவர்களை யாராவது தாங்கிப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை. ஆயுத உதவிக்கு ஒரு நாடு, பண உதவிக்கு ஒரு நாடு என்று ஸ்பான்ஸர்கள் நிறைய இருப்பார்கள், முஜாஹிதீன்களுக்கு பாகிஸ்தான் இருப்பது போல.

ஆனால் விடுதலைப் புலிகள் வெறும் போராட்டக் குழுவாக மட்டும் இல்லாமல், ஒரு தேர்ந்த ராணுவ அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளதை உலகுக்கு இலங்கை ராணுவமே வெட்டவெளிச்சமாக்கி வருகிறது. அதுவும் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல், பெரிய வல்லரசுகளைப் பகைத்துக் கொண்டு இந்த அளவு சொந்த ஆயுத பலத்தோடும் தொழில்நுட்ப வளர்ச்சியோடும் திகழும் அமைப்பு விடுதலைப் புலிகள் மட்டுமே என்பதை இலங்கை ராணுவம் ஒப்புக் கொள்கிறது.

இப்போது ராணுவத்தின் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி, புலிகள் சொந்தமாகவே விமானம் கட்டும் திறனைப் பெற்றுள்ளனர் என்பதுதான். அதுவும் ஆளில்லாமல் பயணித்து குறித்த இலக்குகளைத் தாக்கக் கூடிய சிறுவிமானங்களைக் கட்டுவதில் மிகத் தேர்ந்தவர்களாக புலிகள் திகழ்வதுதான் ராணுவத்துக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு நகரின் ஒரு பகுதிக்குள் நுழைந்துள்ள ராணுவம், அங்கு புலிகள் அழித்துவிட்டுச் சென்ற, விமானம் கட்டும் சிறு தளத்தைக் கண்டுள்ளனர்.

அங்குதான் பாதி எறிந்த நிலையில் விமான உதிரி பாகங்களும், விமான தயாரிப்பு குறித்த கையேடுகளும் கிடைத்ததாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட உதிரி பாகங்களிலிருந்து அவை ஆளில்லா விமானம் மற்றும் இலகு ரக இறக்கைகள் பொறுத்தக் கூடிய விமானங்களின் உதிரி பாகங்கள் என்பதும் தெரியவந்துள்ளதாக சிங்கள ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது.

கையேடுகளின் உதவியுடன் விடுதலைப் புலிகள் சொந்தமாகவே விமானங்களைத் தயாரித்து வந்தது இலங்கை ராணுவத்தினரை பெரும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து வேறு எங்கெல்லாம் இதுபோன்ற விமானங்களை வைத்திருப்பார்களோ என்பதே அவர்களது திகைப்புக்குக் காரணம்.

மேலும் இந்த மாதிரி விமானங்களுக்கு பெரிதாக ரன்வே கூட தேவையில்லை. காட்டுப் பகுதிக்குள் விமானம் கட்டுதல் முழுமையாக நடக்கக் கூடும் என்ற அச்சத்தில் உள்ளது, இலங்கை அரசு. இதனால் சிறுவிமானங்கள் வருவதைக் கணிக்கக் கூடிய புதிய ராடார்களை பொருத்தி கவனித்து வருகின்றனர்.

உலகில் விமானப் படையுடன் செயல்படும் ஒரே விடுதலைப் போராட்டக் குழு புலிகள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விமானப் படை உருவாக்கத்தில் பெரும் பங்கு சார்லஸ் ஆண்டனியைச் சேரும். இவர்தான் இலங்கை ராணுவத்துக்கு இப்போதைய புதிய சிம்ம சொப்பனம், புலிகள் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன்!

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.