Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, May 5, 2009

தலைவர் பிரபாகரன் தொடர் 6





சரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடை யாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும். சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று பெயர் தெரியாத காட்டுச் செடிகள். பகலில் கூடப் பல இடங்களில் இருட்டாகவே இருக்குமளவுக்கு அப்படியொரு அடர்த்தி.

கஷ்டப்பட்டு அந்தப் பிரதேசத்தைக் கடந்துவிட்டால் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் நல்ல தரை உண்டு. அருமையான விவசாய நிலம். பயிர் செய்யலாம். குடிசை போட்டு சுகமாக வாழலாம். மனித வாசனையே கிடையாது. யானை வாசனை மட்டும்தான்.

`பிரமாதம், இங்கேயே நாம் கூடாரம் அமைக்கலாம்' என்று பிரபாகரன் சொன்னார். அது புகழ்பெற்ற வவுனியா கானகத்தின் ஒரு பகுதி. எந்தப் பக்கத்து மெயின் ரோடிலிருந்து வந்தாலும் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தாக வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் உயிருடன் அந்த ஐம்பது ஏக்கர் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடலாம். `பூந்தோட்டம்' என்று பெயர். பிரபாகரன் தான் வைத்தார்.

தோழர்கள் பரபரவென்று நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். தக்காளி விதைக்கலாமா? வெண்டைக்காய்? கத்திரி கூட நன்றாக விளையும். ஆளுக்கொன்று ஆசைப்பட்டார்கள். கொஞ்சம் அரிசி கூட முயற்சி செய்து பார்க்கலாமே?

சத்தியமாகத் தங்களைத் தேடிக்கொண்டு காவல் துறையினர் வந்துவிட முடியாத இடம் என்பது உறுதியான சந்தோஷத்தில் அவர்கள் உற்சாகமாக விவசாயம் செய்தார்கள். உத்வேகத்துடன் துப்பாக்கி சுடப் பழகினார்கள். மணிக்கணக்கில் ஓடவும் எகிறிக் குதிக்கவும் சரேலென்று பதுங்கவும் பாயவும் ஓடியபடி சுடவும் சுட்டுவிட்டுத் தப்பிக்கவும் அக்கறையுடன் பயிற்சியெடுத்தார்கள்.


யானைகள் நிறைந்த அந்தக் கானகத்தின் நடுவே சுமார் இருபது புலிகள் பிறந்து வளர்கின்றன என்று சொன்னால்கூட அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம் முழுதும் இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகவும் உதிரிகளாகவும் ஆயுதப் புரட்சி குறித்து கனவு கண்டுகொண்டிருந்த சமயத்தில் முறையான பயிற்சி, அதன்பிறகு செயல் என்று தீர்மானமாகக் களமிறங்கிய முதல் நபர் பிரபாகரன்.

`நண்பர்களே, ஒரு விஷயம். ஓர் இயக்கம் ஒழுங்காக வளர்வதும் வாழ்வதும் சாதிப்பதும் அத்தனை எளிதான செயலல்ல. நம்மிடையே மிகச் சிறந்த கட்டுப்பாடுகள் இருந்தாலொழிய நமது போராட்டம் வெல்லாது. உங்களில் எத்தனை பேர் வீடு, குடும்பம், காதல், திருமணம் போன்ற சிந்தனைகளை முற்றுமுழுதாகத் துறக்கத் தயாராக இருக்கிறீர்கள்?'

பிரபாகரன் கேட்டார். அத்தனை பேரும் கைதூக்கினார்கள்.

`சரி. நம்மில் யாரும் புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. எந்த விதமான லாகிரி வஸ்துக்களுக்கும் இயக்கத்தில் இடமில்லை. இது கட்டாயம். யாராவது விதி மீறினால் உடனே வெளியேற்றப்படுவீர்கள். முற்று முழுதான விழிப்புணர்வுடன் அத்தனை பேரும் இருந்தாகவேண்டும். சம்மதமா?'

`சரி' என்றார்கள்.

`இயக்கத்தில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. வீட்டாருடன் ரகசியமாகக் கூடத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா எல்லோரும் முக்கியம்தான். லட்சியம் அனைத்தைக் காட்டிலும் முக்கியம். நாம் அவர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அது பிரச்னையாகிப் போகும். புரிகிறதா?'

முன்பொரு நாள் அதிகாலை ஐந்து மணி சுமாருக்கு வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீட்டுக்கு போலீஸ் வந்து கதவு தட்டியதே? அப்போது எழுந்து வெளியே போனதுடன் சரி. இன்றுவரை அவர் தன் வீட்டுப்பக்கம் சென்று பார்த்ததில்லை. அந்த மன உறுதியைத்தான் அவர் தமது தோழர்களிடம் அன்றைக்கு வாக்குறுதியாகக் கேட்டார்.

`எந்தக் காரணத்தாலாவது இயக்கத்திலிருந்து யாராவது வெளியேற நேர்ந்தால் அவர்கள் வேறொரு இயக்கத்தில் போய்ச் சேரவோ, புதிய இயக்கம் தொடங்கவோ கூடாது. புலிகள் அமைப்புக்குள் நிகழும் எந்த ஒரு விஷயமும் வெளியே குறிப்பாக எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. நாம் நட்புணர்வுடன் இருப்போம். ஆனால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம். எந்த விதியையும் யாரும் மீறுவதற்கில்லை. மீறுவது என்று யார் முடிவு செய்தாலும் அது இயக்கத்துக்கு துரோகம் செய்வதாகும். சம்மதமா?'



அவர் கவலைப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அன்றைக்கு இம்மாதிரி புரட்சிகரக் கனவுடன் களமிறங்கிய பல இளைஞர் குழுக்கள் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தன. மாணவர் பேரவை இருந்தது, சிதைந்து விட்டது. பிறகு இளைஞர் பேரவை வந்தது. அதுவும் சிதறிவிட்டது. டி.எல்.ஓ. என்று ஒரு குழு தொடங்கப்பட்டது. ஒரே ஒரு வங்கிக்கொள்ளையுடன் காணாமல் போய்விட்டது. பெயர் வெளியே தெரியும் முன்பே இயக்கம் சிதைந்த கதைகள் அநேகம்.

அம்மாதிரியான அனர்த்தங்கள் ஏதும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் அறவே கூடாது என்று அவர் நினைத்தார். அதனால்தான் யாரும் எண்ணிப் பார்க்கமுடியாத கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் உறுப்பினர்களுக்குப் பிரபாகரன் அளித்த போர்ப்பயிற்சி களுக்குக் கூட முன்மாதிரிகள் கிடையாது. கெரில்லாப் போர் முறைதான். திடீரென்று தோன்றித் தாக்கிவிட்டுக் காணாமல் போய்விடும் முறை. உலகின் பல பாகங்களில் பல இயக்கங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்தான். ஆனாலும் யார் எப்படிச் செய்கிறார்கள், எப்படித் தாக்குகிறார்கள், எப்படித் தப்புகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரன் ஆராயவில்லை. விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவும் இல்லை.

இதோ பாருங்கள். இது நம் மண். நமது பிரச்னை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர்க்கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை. தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனா ஒரு புரட்சி செய்தார்களே, என்ன ஆயிற்று பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் ஆயுதப் புரட்சிதான். அரசுக்கு எதிரான புரட்சிதான். சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி முன் மாதிரிகளை வைத்துக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். என்ன ஆனது? பதினைந்தாயிரம் பேரை பலி கொண்டது தவிர வேறென்ன லாபம்?

வேண்டாம். யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம்தான் ஆசிரியர்கள். நமது பாதையை நாம் தீர்மானிப்போம். இந்தக் காட்டுக்குள் இப்படியொரு வசதியான பயிற்சியிடத்தை நமக்கு நாமே கண்டெடுக்கவில்லை? அதே மாதிரி, நமக்கேற்ற போர்ப்பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

அப்படித்தான் அவர் ஆரம்பித்தார்.



தமிழர்களை புழு பூச்சி அளவுக்குக் கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் 1978 செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அதற்குள் காரியத்தைச் செய்தே முடித்துவிட்டார். ஏர் லங்காவுக்குச் சொந்தமான ஒரு ஆவ்ரோ விமானம். பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்துவிட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இது பேசும் இயக்கமல்ல; செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான். எல்லாம் சரியாக இருந்தது. எல்லோரும் சரியாகவே இருந்தார்கள். சற்றும் எதிர்பாராத விதத்தில்தான் அந்தப் பிரச்னை வந்தது.

பிரச்னை என்பது பூத மாகத்தான் வரவேண்டுமா என்ன? ஒரு காதலாக அது வந்தது.

(தொடரும்)

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.