நீண்ட அடக்குமுறைக்குள் அகப்பட்டு திணறடிக்கப்பட்ட தமிழர்களின் தேசிய வாழ்வு மீதான ஆவல் வலுப்பெற்று அதற்கான தேடல்கள் தீவிரமடையத் தொடங்கியதும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுடைய நியாயமான போராட்டத்தை இராணுவ பலம் கொண்டு அடக்க ஆரம்பித்தது. அன்றைய யதார்த்தத்தின் நிர்ப்பந்தம் கருதி இயல்பாக முகிழ்ந்த ஆயதப் போராட்டமானது தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமாக மாறிய பின் சிங்களப் பேரினவாதத்தின் இராணுவ யுத்தம் எம் மக்களின் மீது கட்டவிழ்த்து விட்ட கொடூரங்களினாலும், இடம்பெயர்வு அவலங்களினாலும் சிங்களத் தேசத்தால் எம் மீது திணிக்கப்பட்ட போர் எமது சமூகத்தின் மீது நிர்ப்பந்தித்த சமுதாய ஒழுங்கு சீர்குலைவுகளினாலும் நிர்க்கதியாகி உறவுகளை இழந்து ஆதரவு அற்று கைவிடப்பட்ட சமூகமாக வாழும் ஈழத் தமிழினம் தன் இன அடையாளத்தையும் இராணுவ வன்முறையையும் எதிர்ப்பதற்கு மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது.
தமிழர்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்திற்கு ஒரு படிமுறை வளர்ச்சி உண்டு. நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகளும் இன்று முன்வைக்கப்படும் பேச்சுவார்த்தை என்ற கோசங்களும் தமிழர்கள் நடந்து வந்த பாதையில் கண்டு வந்த ஒவ்வொரு எல்லைக் கோடுகள் ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் அரசியல் உரிமைகளைப் பெற்று வாழப்போராடிய தமிழினத்தை தன்னாட்சி உரிமைக்காகப் போராடும்படி சிங்கள அரசின் இனவாத செயல்பாடுகள் நிர்ப்பந்தித்தன.
ஜனநாயக வழியில், சாத்வீக முறைகளில் தமிழர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தை வன்முறை வடிவில் ஆயதப் போராட்டப் பாதையில் அரச பயங்கரவாதம் தள்ளியது. இதன் விளைவாய் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான ஆயுதப் போராட்டத்திற்கு தலைகொடுத்த தமிழர் தேசியம் அதை முன்னெடுக்கும் தகைமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒப்படைத்தது. இந்த தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் வாக்குரிமை மூலம் அங்கீகரித்து ஆதரவு வழங்கினர். ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுவது என்ற இலட்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றிலிருந்து இன்று வரை உறுதியாகவே இருந்து வருகின்றனர். எத்தனையோ சோதனைகள் எண்ணற்ற இராணுவ வன்முறைகள் மக்களை மனித கேடயங்களாகப் பாவித்து முன்னெடுக்கப்பட்ட போர் நகர்வுகள் என்று நெருக்கடிகள் சூழ்ந்த போதும் உறுதி குலையாத இலட்சியப் பற்றோடு அந்த அரசியல் இலட்சியத்திலிருந்து வழுவாது கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து போராட்டத்தை முன்னகர்த்தி வந்தனர்.
இதன் விளைவாய் இன்று தமிழர்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டம் சர்வதேச பரப்புக்குள் உயர்நிலை வளர்ச்சி கண்டு சர்வதேச அங்கீகாரத்திற்கான வேண்டுதல்களுடன் முன்னகர்த்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழ் மக்கள் ஏகோபித்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு போராட்டத்தின் இன்ப துன்பங்களில் முழுமையாகப் பங்காற்றி வருகின்றனர். இந்த அரசியல் யதார்த்தத்தை நிராகரிக்க முடியாத தமிழ் அரசியல் கட்சிகளும், தாய்த் தமிழகமும், புலம்பெயர்ந்த சமூகமும் விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் ஏற்றுக் கொண்டு தமிழர்களுக்கான தலைவிதியை நிர்ணயிக்கும் தமிழர் தேசியப் பிரவாகத்தை நிலைநிறுத்த முனைந்துள்ளனர். தாய்த் தமிழகம், அகில பாரதம், அனைத்துலக நாடுகள் என்று தமிழ் மக்கள் தமிழரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், நிறுவனங்கள் என்று தமிழினமே விடுதலைப் புலிகளின் பின்னால் அணிதிரண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வருகின்றனர். தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய பரிமாணம் சிங்கள அரசை திகைக்க வைத்துள்ளது.
சதித்தனமான அரசியல் அணுகுமுறைகள் மூலமும் கடுமையான பொருண்மிய தடைகள் வாயிலாகவும் கொடூரத்தனமான இராணுவ வழிமுறைகள் மூலமும் தமிழரின் விடுதலை எழுச்சியை நசுக்க முயன்ற சிங்கள அரசு இந்த புதிய அரசியல் சூழலைக் கண்டு அச்சமடைந்துள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றலை தனது அரச இயந்திரம் இழந்து விட்டதென்ற கையறு நிலையில் போராட்டத்தை ஒடுக்க மாற்றுவழிகளை சிங்கள அரசு தேடி தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்தை சிதைக்கவும் கொச்சைப் படுத்தவும் முனைந்துள்ளது. இந்தப் போலித்தனமான மாயைத் தன்மைகளை இந்திய அரசு புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்து கொண்டாலும் ஏற்க மறுப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று.
இந்திய அரசின் மௌனம், உலக நாடுகளின் பாராமுகம் சிங்கள அரசை இராணுவ மூர்க்கத் தனத்திற்குள் தள்ளி “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்„ என்ற மேலைத்தேய நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டை சிங்கள அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முனைகின்றது. இதனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சர்வதேசத்தின் முன்னால் சித்தரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் சிங்கள இன முரண்பாட்டின் ஆழ அகலங்களை சரிவர அறிந்து கொள்ளாத சில மேற்குலக நாடுகள் அறிந்தும் மௌனமாக இருக்கும் சர்வதேச சக்திகள் தாங்கள் தயாரித்த பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இணைத்து சிங்களப் பேரினவாதத்திற்கு மகிழ்ச்சியூட்டியுள்ளன.
முன்னர் தமிழர்களின் தாயக நிலத்தை சிதைக்கும் வழிமுறைக்கு விவசாயக் குடியேற்றம் என்று பெயரிட்டு தமிழர் நிலங்களை அபகரித்தது போல பின்னர் தமிழரின் தேசிய தனித்துவத்தை அழித்தொழிக்க ஒரே நாடு ஒரே மக்கள் என இலங்கைத் தேசியம் பேசியது போல இன்று தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தி போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசு முனைந்து வருகின்றது. அத்துடன் களமுனைச் செய்திகளை திரிபுபடுத்தி தனது இழப்புக்களை மூடிமறைத்து விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற மாயையை பிரச்சாரப்படுத்தி சர்வதேசத்தையும் இதன் மூலம் நம்ப வைத்து முழு இலங்கையையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உருவகமாக ஸ்தாபிக்க முனைந்துள்ளது.
புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல. அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒரு விடுதலை இயக்கம் தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரு மக்கள் இயக்கம். தமிழர் மத்தியிலுள்ள பாராளுமன்ற அரசியல் கட்சிகளாலும் சமூக நிறுவனங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அரசியல் தலைமை சக்தி தான் புலிகள் இயக்கம். வெளிப்படையாகவே தெரிகின்ற இந்த அரசியல் உண்மையை உலகின் சில அரசுகள் கருத்தில் எடுக்காதது வேதனை அளிப்பதாகவே உள்ளது. இன அழிப்பை மேற்கொண்டுவரும் சிங்கள அரசை சுற்றவாளிகள் போலவும் அதன் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் ஒரு விடுதலை இயக்கத்தை குற்றவாளிக் கூண்டிலும் நிறுத்த முயலும் இந்த அரசுகளின் செயல் வருத்தமளிப்பதாகவே உள்ளது. நீதியைக் கண்டித்து அநீதிக்கு துணைபோவதாகவே உள்ளது.
அரசியல் வன்முறையின் தோற்றப்பாடு பற்றி ஓர் ஆழமான பார்வை இருந்தால் தான் உண்மையான விடுதலைப் போராட்டங்களுக்கும் குருட்டுத் தனமான பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் மத்தியில் வேறுபாடு காண முடியும் என்ற தலைவர் பிரபாகரனின் கூற்றை உலக சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலம் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை எவராலும் நிறுத்திவிட முடியாது. உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை நசுக்க முற்படும் போது அது தேசிய எழுச்சி கொள்வதை எவராலும் தடுக்க முடியாது. 30 ஆண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றில் தமிழர் போராட்டம் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்தாலும் இறுதியில் மக்களின் ஒன்றுபட்ட பலத்தால் அவை வெற்றி கொள்ளப்பட்டே வருகின்றன.
தமிழரின் தன்னாட்சி உரிமைக்கான ஆயுதப் போராட்டம் இறுதி வெற்றியை நோக்கி வீறுநடை போடும் இன்றைய சூழலில் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பின்தொடர்ந்து தலைவர் பிரபாகரனின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழரின் விடுதலையை வென்றெடுக்க அணிதிரள வேண்டும்
Thursday, April 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment