“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”.
இது நம் முண்டாசுக் கவி பாரதியின் பாடல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு தோன்றும் உணர்ச்சி வார்த்தையில் அடங்காதது. அத்தகைய தமிழ் மொழியை நாம் இந்த காலகட்டத்தில் மறந்து வருகிறோமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”
என்றார் பாரதி. தெருவெல்லாம் வேண்டாம் இன்று சில வீடுகளில் தமிழ் பேசுவதை சுத்தமாக மறந்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் உரையாடுவதையே கௌரமாக நினைக்கிறார்கள். இது நாம் நம் தாய்மொழிக்கு செய்யும் இழுக்காகும். என்ன இல்லை நம் தமிழ் மொழியில்
“”தமிழ்தனில் உள்ள எல்லாச்
சொற்களும் கவிதை சொல்லும்”
என்றார் திரு நாரண துரைக்கண்ணனார். இன்று தொலைக்காட்சியில், வானொலியில் பேட்டி கொடுப்பவர்கள் பலர் தங்களுக்கு தமிழே தெரியாதது போல் பாவனை செய்து ஆங்கிலத்திலேயே பேசி முக்கால் பங்கு பேட்டியை முடித்து விடுகிறார்கள். சில இடங்களில் தான் தமிழ் வார்த்தையையே உபயோகிக்கிறார்கள்.
தமிழுக்கு கதி எனக் கூறுப்பெறுபவர் கம்பரும், வள்ளுவரும். தமிழின் பெருமையை உலகுக்கு அறநூல் என்றமுறையில் நிலை நாட்டியவர் திருவள்ளுவர். கவிச்சக்கரவர்த்தி என்ற பெயரை நிலைநாட்டியவர் கம்பர். தமிழர் ஒழுக்கச் சட்டநூல் திருக்குறள், தமிழ் மக்களுக்கு வள்ளுவர் வகுத்தமைத்து வைத்த பாதுகாப்புப் படை! ஏன்? தமிழர்க்கு மட்டுமன்றி உலக மக்களுக்கே எனக் கூறலாம். பல நூற்றாண்டு களுக்கு முன்பே எழுதப்பட்ட குறள். பல அயல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது என்பதில் நாம் சிறிது கர்வம் கூட கொள்ளலாம்.
இராமனுடைய அழகில் மயங்கிய சூர்ப் பணகை இவ்வாறு உருக்கொண்டு வருகிறாளாம்.
“”தேனின் இதழ் பெற்று, திகழ் முத்து நனி பெற்று, ஓர்
மானின் விழி பெற்று, மயில் வந்ததென வந்தாள்”
Wednesday, April 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment