Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Sunday, May 3, 2009

புலிகள் ஏன் காத்திருக்கிறார்கள்?????????

சிறப்புக் கட்டுரை

இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான்.

எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே!

ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்களில் மறைமுகமாகவும் ஒரு இனப்படுகொலையையே நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சற்று மட்டுப்படுத்துவதற்கோ எந்தவொரு சர்வதேச நாடும் முன்வரவில்லை. எதிர்மாறாக, பலநாடுகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லிக்கொண்டு மகிந்த அரசு நடத்தும் கொலைவெறிப் போருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றதோடு தோளோடு தோள் கொடுப்பதாய் ஆயுத,பண,படைபல உதவிகளை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

தட்டிக் கேட்க வேண்டிய நாடுகள்கூட தமிழரை தனியாய் தவிக்கவிட்டுவிட்டன. ஒரு இனமே அழிவின் விளிம்பில் நிற்கின்றது. துக்கம் விசாரிக்கக்கூட ஒரு துணையில்லை.

இவற்றிற்கிடையில் ஒரேயொரு ஆறுதல் தமிழக மக்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்களின் பேரெழுச்சிமிக்க ஆதரவுதான் தமிழகத்தில் முத்துக்குமாரின் தியாகத்துடன் அது இன்னும் அதிகமாகி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஏன் சாதரண மக்கள்கூட பேரெழுச்சியுடன் ஈழத்தமிழர்களுக்காக தங்களின் ஆதரவுக்குரலை மிக வீரியத்துடன் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த எழுச்சிகளுக்கெல்லாம் தான்தோன்றித்தனமாக நடந்துவரும் இலங்கையரசு அடிபணியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆயினும் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஏழுகோடி தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இருக்கிறார்கள் என உணர்த்துவதற்கு வேண்டுமானால் அவை உதவலாம். மொத்தத்தில், புலம் பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் என அனைவரும் எழுச்சி பெற்று ஒரே குரலில், வன்னியில் அவலப்படும் மக்களுக்காகவும், தமிழகத் தீர்வுக்காகவும் குரல்வளை வலிக்க குரலெழுப்பியும் அது யார் செவியிலும் விழவில்லை. அது அனைத்துத் தமிழர்க்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தினைக் கொடுத்திருந்தது.

எழுச்சிக் கோரிக்கைளை எழுப்பி எழுப்பி களைத்துப்போய் அந்த எழுச்சிக் குரல்களின் இயலாமை இன்று தமிழர் மனதில் ஒரு வெறியாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது.

சிங்கள அரசின் வெற்றிப் பரப்புரைகளினால் தமிழர் படை தோற்றுப் போய்விடும் என்றொரு மாயத் தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழன் தோற்றுப் போகக்கூடாது.

தமிழன் தோற்றுப் போனால் தமிழனின் எதிர்கால வரலாறு "அடிமை வரலாறு" ஆகவே எழுதப்படும்.

எனவே இது நடக்காமல் தடுக்க தமிழர்களின் காவலர்களான புலி மறவர்களின் பின்னால் அணி திரள்வது: தமிழர்களுக்காக போராடும் புலிகளை சர்வதேச ரீதியிலும் பலப்படுத்துவது மற்றும் சகலவழிகளிலும் அவர்களுக்கு உதவுவது, என்னவானாலும் பரவாயில்லை... இதுவொன்றுதான் தமிழன் வெற்றிபெற ஒரேவழி. இதற்காக தன்மானமிக்க தமிழனாய் இயன்றவரை போராடவேண்டும். அவ்வாறு செய்தால் நானும் ஒரு விடுதலைப் போராளிதான் என்ற எண்ணமும் என் தேசத்திற்காக அதன் விடுதலைக்காக எதையாவது செய்தாக வேண்டும் என்ற வெறியும் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் மனதினுள்ளும் உருவாகிவிட்டது. இப்பொழுது அனைத்துத் தமிழரினதும் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் அவர்கள் மத்தியில் எழும் சந்தேகங்களும் பலவழிகளில் அறியப்படும் போர்ச் செய்திகளும் அனைவரையும் ரொம்பவே குழப்பிவிட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ன?

இப்போது நடந்து கொண்டிருப்பது இறுதிப்போர். இறுதிப்போரில் தமிழன் தனியாய் நின்று போராடிக் கொண்டிருக்கின்றான். இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தால்தான் தமிழனுக்கு வாழ்வும் வரலாறும். இல்லையேல்... "அகதி" என்ற பெயரோடு "அடிமை" என்ற பெயரையும் தமிழன் தனதாக்க நேரிடும்.

உலகமே சிங்கள அரசின் பக்கமாக அணிதிரண்டு நிற்க, தமிழர்படை தனித்து தன்மானத்தோடு, உறுதியோடும். தீரத்தோடும் எதிர்த்து நிற்கின்றது. வாழ்வா? அல்லது சாவா? என்ற நிலைப்பாட்டுடனான இந்த இறுதியுத்தத்தின் யாதார்த்த நிலைமைகள் என்ன? அதன் பரிமாணங்கள் என்ன? என சற்று ஆராயலாம்.

'இப்போரானது வன்னி நிலப்பரப்புக்குள் மட்டுமே நடக்கிறது" என யார் கூறினாலும், அது அவர்களின் அறியாமையே! இப்போரானது இன்று பல பரிமாணங்களில் உலகமெங்கும் வியாபித்து நிற்கின்றது. "தமிழீழப் போராளிகள்" இப்போது புலிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனும், புலம் பெயர்தேசங்களிலுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தமிழீழப் போராளியாக உருவாகி நிற்கின்றான். சர்வதேசத்தின் காதுகிழியக் கத்திக் கொண்டிருந்தவன், இன்று அதன் கழுத்தைப் பிடித்துக் கேட்கும் தூரத்திற்கு வந்துவிட்டான். சர்வதேசம் நமக்கு நீதித்தீர்வினை தந்தாகவேண்டும்! என்ற நிலைமையை உருவாக்க முனைந்துகொண்டிருக்கிறான். உருவாக்கியே ஆகவேண்டும். இதுதான் இன்றைய நிலைமையில்,போராளியாக உருமாறி நிற்கின்ற ஒவ்வொரு தமிழனினதும் கடமை.

இது இவர்களின் கடமையென்றால், ஈழத்தில் புலிகள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது. "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பின் கடந்தகால வரலாறுகள்... அவர்களின் திறமையையும், விவேகத்துடன் கூடிய வீரத்தினையும், மன உறுதியையும் கொள்கை தவறாத உளவுரத்தையும் நன்கே பறைசாற்றும். புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து முழு உலகமுமே அதிர்ச்சியில் உறைந்துபோய் வியந்துநிற்கின்றது. அந்த வழியில் இறுதியாக கொடுத்த அதிர்ச்சி மருந்துதான், அண்மையில் கொழும்பில் நடாத்திக் காட்டப்பட்ட வான் கரும்புலித்தாக்குதல், வான்கரும்புலிகள் விடுதலைப்புலிகளின் பலத்தினை ஒருபடியல்ல பலபடிகள் மேலே உயர்த்தியிருக்கிறார்கள். இன்னும்பல அதிர்ச்சிகள் காத்துக்கிடக்கின்றன.

இவற்றையும் மீறி புலிகள் பலமிழந்து விட்டார்களா? என கேள்வி எழுப்புவர்களும் இருக்கிறார்கள.; அவர்கள் நினைப்பதுபோல உண்மையிலேயே புலிகள் பலமிழந்து விட்டார்களா? (!) என பார்ப்பின்… இன்று புதுக்குடியிருப்பு வாசல்வரை வந்து நிற்கின்றது சிங்கள இராணுவம். இராணுவ நடவடிக்கை கிழக்கில் ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது புதுக்குடியிருப்புவரை புலிகள் நிலத்தினை மட்டும்தான் இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய போராளிகளையும் ஆயுததளபாடங்களையும் அதிக இழப்புக்களின்றி நாம் திட்டமிட்டபடி பாதுகாப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். புலிகளின்பலம் அப்படியே பேணப்பட்டது மட்டுமன்றி ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்டு தற்பொழுது மிகவும் செறிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் பரந்து விரிந்து கிடந்த புலிகளின் பலங்கள் இப்போது இறுதிப்போர் நடக்கப்போகும் இடத்தில் செறிவாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே உண்மை.

இந்நிலையில் புலிகளின் பின்வாங்கல் கிளிநொச்சியுடன் நின்றுவிடும் என்றுதான் அநேகர் நினைத்திருந்தனர். ஆனாலும் அதற்கு எதிர்மாறாக புலிகள் தங்களின் கோட்டையான முல்லைத்தீவு வரையும் இராணுவத்தினை முன்னேற அனுமதித்தது... அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இராணுவ ஆய்வாளர்கள் கூட தங்கள் தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டனர். 'ஏன் புலிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?;" என்பது அனைவரிற்கும் புரியாத புதிராகவே இற்றைவரை உள்ளது. விடுதலைப்புலிகள் முற்றிலும் வித்தியாசமானவர்கள்... அவர்களின் திட்டமிடல் மற்றும் போர்த்தந்திரங்கள் வித்தியாசமானதாக இருக்கும்... யாரும் இலகுவாய் ஊகிக்கக்கூடிய விடயங்களை அவர்கள் செய்யமாட்டார்கள்... எதிர்பார்க்காத ஒன்றினை எதிர்பாராத தருணத்தில் செய்வார்கள்... அது அவர்களின் தனிப்பாணி. இது புலிகளை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.

புலிகள் ஏன் காத்திருக்கிறார்கள்? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்த்திருக்கும் தருணம் எது? எப்பொழுது அவர்களின் முழு அளவிலான பதில்த்தாக்குதல் ஆரம்பமாகும்? அவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இன்று இக்கேள்விகளுக்கான விடைகளைத்தான் அனைத்துத் தமிழர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்... இன்று உலக நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கை அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு நிற்கின்றன. புலிகள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என புராணம் பாடிக்கொண்டு நிற்கின்றன. ஐ.நா சபை கூட இதற்கு விதிவிலக்கல்ல இன்னும் சில நாடுகளுக்கு புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து வியந்துபோய், இது தொடர்ந்தால் என்னவாகும் என்ற பயம் உருவாகிவிட்டது. எதிர்காலத் தமிழீழ தனியரசு பற்றி நினைப்பே, அவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது போலும்! அதனைத் தடுப்பதற்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி புலிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டலாம,; அதன்மூலம் தமிழீழம் என்கிற தனிநாடு உருவாவதை தவிர்க்கலாம் என்ற கனவில் இலங்கை அரசிற்கு சகல வழிகளிலும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் புலிகள் தனித்தே நிற்கின்றார்கள்.

அவர்களுக்கான ஒரேயொரு ஆதரவு உலகம் பூராவும் பரவிவாழும் தமிழ் மக்கள்தான் மட்டும்தான். ஆதலால்தான் புலிகள் தங்களது முதற்கட்ட காய்நகர்த்தல் நடவடிக்கையாக 'உலகத்தமிழ் மக்களைக்கொண்டு சர்வதேசம் நோக்கிய வேண்டுகோள்" என்ற ரீதியான காய்நகர்த்தலை தேர்ந்தேடுத்திருக்கீறார்கள். இதற்காக வன்னிமக்கள் படும் பேரவலங்களை உலகறிய வெளிக்கொணர்ந்தார்கள்; அவற்றைக்கண்டு பொங்கியெழுந்த தமிழினம் சர்வதேசத்தினை தட்டிக் கேட்கத் தொடங்கியது.

இதன் ஆரம்பத்தில் சர்வதேசத்தால் அவை கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் விடப்பட்டன. ஐ.நா.சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் மௌனம் சாதித்தன. ஆனாலும் கொதித்தெழுந்த தமிழ்மக்கள் இடைவிடாமல் போராடத் தொடங்கினார்கள். தீக்குளிக்கும் அளவுக்கு தியாக உணர்வும் துணிவும் கொண்டார்கள். இதை பார்த்து சர்வதேசம் சம்பிரதாயத்திற்கு ஓரிரெண்டு கோரிக்கைகளை 'யுத்த நிறுத்தம் செய்யலாமே!" என்ற மாதிரிக்கு இலங்கை அரசை நோக்கித் தெரிவித்தது. ஆனால் இலங்கையின் மகிந்த ராசபக்சே தலைமையிலான தான்தோன்றித்தனமான அரசு தனது காட்டமான எதிர்ப்பு மற்றும் அவர்களின் கோரிக்கை நிராகரிப்பு அறிக்கைகளை கூறி அந்தந்த நாடுகளையும், ஐ.நாவையும் முகங்கோண வைத்திருக்கின்றது. இதன் எதிர்விளைவுகள் நமக்கு சாதகமாக அமைந்தால் அது புலிகளின் முதற்காய்நகர்ந்தலுக்கான வெற்றி என்றுதான் பொருள்படும.; மறுவளமாக அதன் பாதிப்புகளை சிங்கள அரசு அனுபவிக்கவும் நிர்ப்பந்திக்கப்படும். அத்தோடு முக்கியமாக, பலர் சொல்வதனைப்போல அமெரிக்காவின் ஓபாமா அரசின் பரிவான பார்வைக்காகவும். இந்தியாவில் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலினால் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிச்சயமில்லாத ஆட்சிமாற்றத்திற்காகவும் புலிகள் காத்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

புலிகள் தங்களது திட்டப்படி தங்களது தந்திரபாயமான கால்நகர்த்தலினாலும் உலகத்தமிழர்களினது உணர்வெழுச்சியினாலும் சர்வதேச நாடுகளை தம்பால் திசை திருப்பவே முயலுவார்கள். உலகம் பூராவும் மக்களின் பேரெழுச்சி தொடர்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் களத்தில் ஈட்டப்படும் வெற்றிகளைவிட புலத்தில் ஏற்படும் பேரெழுச்சிகளால் மிகவும் சாதகமான விளைவுகளைப் பெறலாம் என்பதை புலிகள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இச்சாதகமான விளைவுகளை பெற்றாகவேண்டும் என்ற காரணத்தினால்தான் புலிகள் தாங்கள் அண்மையில் பெற்ற இருபெரும் வெற்றிகளைப்பற்றி எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. அவற்றில் ஒன்று கல்மடுக்குளம் உடைப்புத் தாக்குதல், மற்றையது புதுக்குடியிருப்புத் தாக்குதல் இவ்விரண்டு சண்டைகளிலுமே சிங்கள இராணுவம் மிகபபெரும் இழப்புகளை சந்தித்ததோடு ஆயுத தளவாடங்களையும் பெருமளவில் இழந்திருந்தது.

இவ்வெற்றிச் செய்திகளினை வெளியிடுவதினால் உலகத் தமிழரின் பேரெழுச்சி மற்றும் வன்னி மக்களுக்கான குரல்கள் அடங்கிவிடக்கூடாது என்பதானலேயே மிகவும் புத்திசாலித்தனமாக அச்செய்திகளை வெளியிடுவதனை தவிர்த்திருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில், புலிகள் அதற்கான நற்பலன்களை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் என்றே கருத வேண்டும். உலகத்தின் பார்வை ஈழத்தின்மேல் நோக்கத் தொடங்கியிருக்கின்றது.

இதன்வழியில் இலங்கையரசின் வெற்றிப்பரப்புரைகளைத் தாண்டி சில நாடுகள் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளன. இது உலகத் தமிழருக்கும் புலிகளுக்கும் கிடைக்கத் தொடங்கயுள்ள வெற்றி என்றே சொல்லலாம். இவ்வெற்றிகள் இன்னும் தொடரும் என்பது உலகத் தமிழரின் கைகளிலேயே தங்கியுள்ளது. இனி... புலிகள் நிறைவுறச்செய்யும் தறுவாயில் கொண்டு வந்திருக்கும் மற்றொரு காய்நகர்த்தல் என்ன என்பதைப்பற்றியும் அதன் பலாபலன்கள் எப்படியிருக்கும் என்பதைப்பற்றியும் பார்க்கலாம்... முன்னேறிவரும் இராணுவத்தினை அதன் கட்டமைப்புரீதியாகவும் படையினரின் உளவுரீதீயாகவும் இயன்றவரை பலவீனப்படுத்துவதென்பதே அக்காய்நகர்த்தலின் தந்திரோபாயதத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதாவது தம்மை நோக்கி முன்னேறி வரும் எதிரியை வரும்வழியிலேயே முடிந்தவரைக்கும் இழப்புகளை ஏற்படுத்தி பலவீனப்படுத்தி தம் வாசல்வரை வரவைப்பது. தாம் திருப்பித் தாக்கத் தொடங்கும்போது அவனால் திருப்பி ஓடக்கூட முடியாமல் திணறும்போது எதிரியை ஒட்டு மொத்தமாக அழிப்பது என்பதுவே அதன் திட்டம். இப்பொழுது அத்திட்டம் ஈடேறிவரும் நிலையில்... இந்த மிகமுக்கியமான தருணத்திற்காகத்தான் புலிகள் எதிரியை தங்கள் வாசல்வரை வரும்வரைக்கும் அனுமதித்து இதுவரை பின் வாங்கியிருக்கின்றார்கள்.

இலங்கை அரசும், இராணுவமும் சொல்வதனைப் போலல்லாது, உண்மையிலேயே சிங்கள இராணுவம் மிகவும் பலமிழந்து, ஆளணியிழந்து, களைப்படைந்து உளவுறுதியில்லாமல் மிகவும் சோர்வடைந்து வந்து நிற்கிறது. வாசல்வரை வந்துவிட்டோம்... கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நப்பாசையில்தான் இராணுவம் இருக்கின்றது. ஆனால் புலிகளோ...! பாதுகாப்பாக பதுங்கி வந்தவர்கள் இப்பொழுது எதிரிமீது பாய்வதற்குத் தயாராகிவிட்டார்கள். புலிகள் பாயவேண்டிய தருணம் மிகமிக நெருங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆயினும் அவர்கள் பாய்வது உலகத் தமிழரினது எழுச்சியில்தான் தங்கியுள்ளது என்பதனை உலகத் தமிழர்களாகிய நாம் கருத்தில் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில்.... புலிகள் களத்தில் தமது பலத்தினை நிரூபிக்கும்பொழுது அதற்கு உலகநாடுகளை தலைவணங்கவைத்து எமது இறுதி மீட்புப்போரின் வெற்றியால், 'தமிழீழம்" எனும் தனிநாடு உருவாவதனை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு புலத்தில் வாழும் உலகத்தமிழர்களான எங்களின் தலையாய கடமை. இது சர்வதேசத்தினை நோக்கியதான எங்களனைவரினதும் ஒன்றுதிரண்ட பேரெழுச்சியிலேயே தங்கியுள்ளது. புலிகள் உண்மையிலேயே காத்திருப்பது உலகத்தமிழர் அனைவரினதும் ஒன்று திரண்ட பெரெழுச்சிக்காகத்தான். எங்களது எழுச்சிகளும் போராட்டங்களும்தான் பெருமாற்றங்களை கொண்டு வரப்போகிறது. ஆதலினால்... எமது எழுச்சிகளையும் போராட்டங்களையும் ஓயாத அலைகாளாய் ஓய விடாமல் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்...! எம் தேசத்தின் விடிவுவரை.......!

புலிகள் தமது பதில்தாக்குததலை ஆரம்பிக்கும்பட்சத்தில் அதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கும் என பார்ப்போமானால், ஏற்கனவே பல இடங்களில் அடிவாங்கி சோர்ந்துபோன நிலையில் புலிகளின்வாயிலில் வந்து நிற்கின்றது இராணுவம். அது இப்போது புலியின் வாயில் வந்து நிற்கின்றது என்று சொன்னால் சாலப்பொருந்தும்.

புலிகளிடமுள்ள ஆளணி எண்ணிக்கையை யாருமே அறியமாட்டார்கள். ஆனாலும் கடந்தகால தரவுகளின்படி ஆகக்குறைந்தது இருபத்திஐயாயிரம் போராளிகளாவது இருப்பார்கள் என ஊகத்தின் அடிப்படையில் கணிக்கலாம். அத்துடன் வன்னியில் இப்பொழுதிருக்கும் ஏற்கனவே ஆயுதப்பயிற்சிபெற்ற 'மக்களணிகள்" அங்கு நடந்தேறும் கொடூரமான அவலங்களைக் கண்ணுற்று உணர்வெழுச்சிகொண்டு தற்பொழுது புலிகளாகவே மாறியிருக்கிறார்கள். புலிகளுடன் சேர்ந்த அம்மக்களனைவரும் சேர்ந்து தீரமுடன் பொங்கியெழுந்து... புலிகளிடமுள்ள அத்தனை ஆயுதங்களும் குண்டுகளை கக்கும்போது... முன்னரங்கில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தின் நிலை என்னவாகும் என்பதை சொல்லத்தேவையில்லை.

தியாக உணர்வுங்கொண்ட தீரமிக்க போராளிகளின் தாக்குதல்களுக்கு முன்னால் சம்பளத்திற்காகச்சேர்ந்த கூலிப்படைகளான சிங்களப்படைகள் எந்தளவுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதையும் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

இராணுவத்தின் ஆளணிப்பற்றாக்குறை காரணமாக, அதனால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்யாவும் மிகமிகக் குறைந்தளவிலான ஆளணிகளினாலேயே பாதுகாக்கப்பட்டுவருகிறது. அவர்களும் ஓடத்தொடங்கி தாங்கள் போரைத்தொடக்கிய இடத்தினை தொடுவதற்குள், முன்னரங்கை உடைத்து உள்நுழையும் புலிகள் அணியினாலும், ஏற்கனவே ஊடுருவியுள்ள புலிகளணியினராலும் அழிக்கப்படப்போவதனை யாராலும் தடுக்கமுடியாததாகிவிடும். மீளமுடியாத இழப்புக்குள் அடங்கிப்போகும் இராணுவத்தினால் மீள எதுவுமே செய்யமுடியாது செயலிழந்து போகும். அதன் கட்டமைப்பு முற்றுமுழுதாக சிதைக்கப்படும். அதற்கு அப்புறம் இலங்கையரசினால் இன்னுமொரு இராணுவ நடவடிக்கையினை மனதளவினில்கூட நினைத்துப்பார்க்க முடியாததாகிவிடும்.

இதனை செய்வதற்காகத்தான் புலிகள் மிகவும் பொறுமையுடன் தருணம்பார்த்து காத்திருக்கிறார்கள். அனைத்துத் தமிழ்மக்களும் அந்த இறுதிமீட்புப்போர் எப்பொழுதென்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

உலகத்தமிழ்மக்களே! உச்சக்கட்டத்திற்கு செல்லும் உங்களது ஓயாத பேரெழுச்சிதான் அந்த மீட்புப்போரை ஆரம்பித்துவைக்கும். அதை வெற்றிப்பாதைக்கும் இட்டுச்செல்லும். புலிகள் காத்திருந்த காலம்போய்... இப்பொழுது எதிர்பார்த்திருக்கிறார்கள் பாய்வதற்கு. தொடக்கிவைப்பதும் வெற்றிகரமாக முடித்துவைப்பதும் உங்கள் கைகளில்தான். எனவே... ஓயவிடாதீர்கள் உங்கள் பேரெழுச்சியை. தமிழ்படையாம் நம் புலிப்படையின் தீரமிகு பாய்ச்சலினாலும் உலகத்தமிழர் நம்மனைவரினதும் வீறுகொண்ட பேரெழுச்சியினாலும் சிங்களத்தின் வெற்றிக்கனவை தகர்த்தெறிந்து வெற்றியை எமதாக்கி இழந்த நம் நிலங்களை மீட்டெடுத்து தமிழீழ தேசத்தினை உருவாக்குவோம். எம் மாவீரர்களின் கனவை நனவாக்குவோம். இது உறுதி!

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.