பிரபாகரன்… இந்த ஒரு வாரத்தில்!
பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாக’ இலங்கை ராணுவம் அறிவித்தது முதல், அவர் உயிரோடு நலமாக உள்ளதாக புலிகள் நான்காவது முறையாக இன்று அறிவித்துள்ளது வரையிலான முக்கிய நிகழ்வுகளும் அதையொட்டிய முரண்பாடுகளையும் இங்கே தொகுத்துள்ளோம்… இதற்கு மேலும் கூட பல செய்திகள் வரலாம்.
பிரபாகரன் என்ற இன உணர்வை இவர்கள் அறிக்கைப் போர் வடிவத்துக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே இவற்றின் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்து கொள்ளவே நடந்தவற்றை ஒரு தொகுப்பாகத் தருகிறோம்.
மே 18 :
“இலங்கை ராணுவ முற்றுகையில் இருந்து (வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி) பிரபாகரன் தனது தளபதிகளுடன் குண்டு துளைக்காத ஒரு கவச வேனில் வட பகுதியை நோக்கி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, ராணுவத்தினர் வீசிய ராக்கெட்டில் பிரபாகரன் சென்ற வேன் சிதறடிக்கப்பட்டது. பின்னர், அந்த வேனுக்குள் இருந்து சிதைந்த நிலையில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டது. எனவே அடையாளம் காணமுடியவில்லை.
ராணுவத்துடன் நடந்த இறுதிக்கட்ட சண்டையில் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதி செயலகத்தின் இயக்குனர் எஸ்.புலித்தேவன் உள்ளிட்ட 220-க்கும் அதிகமான விடுதலைப்புலிகளும் ராணுவத்துடன் போரிட்டு இறந்தனர்”, என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்செகா தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தி ஒத்து ஊதியவர் உதய நாணயக்கார!
ராணுவம் வெளியிட்ட இந்த தகவலை மறுத்த, புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன், ‘சேனல் 4′ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இலங்கை ராணுவம் கூறி வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட மோசடியே. களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடல்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று ராணுவம் கூறி வருகிறது. இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது,” என்றார்.
மே 19 :
விடுதலைப்புலிகளை போரில் ராணுவம் வீழ்த்திவிட்டது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே தெரிவித்தார். ஆனால், பிரபாகரன் மரணம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
ராஜபக்சே உரையைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில், போரில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் மதியம் அறிவித்தது. அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வெளியிட்டது.
இம்முறை வேறு கதை சொன்னது.
“பிரபாகரனின் உடல் நந்தி கடல் கழிமுக பகுதியில் கிடந்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர். மேஜர் ஜெனரல் கமல் குனரத்னே தலைமையிலான 53-வது படைப்பிரிவினர் பிரபாகரனின் உடலை கண்டு எடுத்தது,” என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கர தெரிவித்தார்.
பிரபாகரனின் உடலை விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), ராணுவத்தில் சரணடைந்த தயா மாஸ்டர் ஆகியோர் அடையாளம் காட்டியதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
ஆனால் இப்போதும் செல்வராசா பத்மநாதன் ஒரு பேட்டி அளித்தார்.
அதில், விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகள் பி.நடேசன், எஸ்.புலித்தேவன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது உண்மையே. ஆனால் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமுடனும் உள்ளார் என்றும், தான் அவரோடு பேசியதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.
பிரபாகரனின் மரணம் உறுதிசெய்யப்படவில்லை என்பதால், அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
மே 20:
பிரபாகரன் மரணமடையவில்லை என்று கூறி, புலிகள் தரப்பு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வந்த நிலையில், அவரது மரணம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறிய இலங்கை அரசு, “பிரபாகரன் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை பெறப்படும். அதைத்தொடர்ந்து சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பிறகே பிரபாகரன் உடல் அடக்கம் செய்யப்படும்,” என்று தெரிவித்தது.
மே 21:
இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் ஆகியோர் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேயை சந்தித்து விருந்துண்டனர். ஏராளமான புதிய உதவிகளை இலங்கைக்கு அறிவித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பிரபாகரன் மரணம் பற்றிய சான்றிதழை கேட்க வந்ததாகவும், அந்த சான்றிதழ் வந்துவிட்டால் ராஜீவ் கொலை வழக்கை மூடிவிடுவோம். பிரபாகரன் மரணத்தில் இந்தியாவிக்கு சந்தேகமே இல்லை, என்றும் கூறினர்.
மே 22 :
இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டி ஒன்றில், “விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாங்கள் போரில் உயிருடன் பிடிக்கவே விரும்பினோம். அப்படி பிடித்திருந்தால் அவரை ராஜீவ்காந்தி கொலை வழக்கிற்காக இந்தியாவின் வசம் ஒப்படைத்திருப்போம். 30 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டிலிருந்து தீவிரவாதிகளை அடியோடு அகற்றி இருக்கிறோம். இப்போது நாங்கள் ஒருங்கிணைந்த, முழுமையான நாடாக திகழ்கிறோம்,” என்றார் ராஜபக்சே. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அவர் கூறவில்லை.
அதேநேரம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும், தகுந்த நேரத்தில் அவர் மக்கள் முன் தோன்றுவார் என்றும் விடுதலைப்புலிகளின் வெளிவிவகார உளவுத்துறையின் தலைவர் அறிவழகன் அறிவித்தார்.
இதுபற்றி புலிகள் ஆதரவு இணையதளம் வெளியிட்ட செய்தியில், “தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று இலங்கை அரசாங்கமும், அதன் ராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரசாரத்தை திட்டவட்டமாக மறுக்கிறோம்.
தமிழீழ விடுதலைக்கு ஆதரவு குரல் எழுப்பி வரும் உலக சமுதாயத்தை குழப்புவதற்காக இலங்கை அரசாங்கம் தமிழ் ஈழ தேசிய தலைவர் தொடர்பான பொய்ப் பிரசாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது. எமது பாசத்துக்குரிய தேசிய தலைவர் உயிருடனும், நலமுடனும் இருக்கிறார். அவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்,” என்று அறிவழகன் கூறியிருந்தார்.
மே 23:
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் உடலை எரித்து, சாம்பலை கடலில் வீசி விட்டதாக, இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா தெரிவித்தார்.
மே 24
பிரபாகரன் கொல்லப்பட்டதாக மே 18-ல் இலங்கை ராணுவம் அறிவித்தபோதும், 19-ம் தேதி அவரது உடல் என்ற ஒன்றை ராணுவம் காட்டிய போதும் அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்த புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், மே 24-ம் தேதி ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பிரபாகரன் ‘வீர மரணமடைந்து’விட்டதாகக் கூறி அதிர வைத்தார்.
மேலும், லண்டன் பி.பி.சி. ரேடியோவுக்கு டெலிபோன் மூலம் அளித்த பேட்டியிலும், பிரபாகரன் மரணமடைந்தாக செல்வராசா பத்மநாதன் திரும்ப திரும்ப கூறினார்.
பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை தமிழர்கள் யாரும் நம்ப வேண்டாம், பிரபாகரன் தக்க நேரத்தில் வருவார் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனும் பத்மநாதனின் அறிக்கையை நம்ப வேண்டாம், பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று கூறினார்.
மே 25:
செல்வராஜா பத்மநாதனின் அறிக்கைக்கு மறுப்பாக மீண்டும் புலிகளின் புலம் பெயர்ந்தோர் விடுதலைப்புலிகள் துறை தமிழ்நெட் இணைய தளத்துக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் விடுதலைப்புலிகளுக்கு உளவுத்துறை கொடுத்துள்ள தகவல்படி பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். வேறு எந்த குழப்பமும் வேண்டாம், என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment